ஜெயலலிதா சிகிச்சையின் போது சிசிடிவியை அணைத்து வைத்திருந்தது ஏன்? – பிரதாப் ரெட்டி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தபோது, மருத்துவமனையிலிருந்த சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாக அந்த மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பிரதாப் ரெட்டி, ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணை ஆணையத்திடம் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் அவருக்கு அளிக்கப்பட்டுவந்த முந்தைய சிகிச்சைவிவரங்களும்கூட அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார்.

ஜெயலலிதா தொடர்பான சிசிடிவி பதிவுகள் ஏதாவது விசாரணை ஆணையத்திடம் அளிக்கப்பட்டதா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, துரதிருஷ்டவசமாக, ஜெயலலிதா சிகிச்சைபெற்றுவந்த பகுதியில் சிசிடிவிகள் அணைத்துவைக்கப்பட்டிருந்ததாக பிரதாப் ரெட்டி கூறினார்.

ஜெயலலிதா சிகிச்சைபெற்றுவந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் 24 படுக்கைகள் இருந்ததாகவும் அதில் இருந்த நோயாளிகள் பிற பிரிவுகளுக்கு மாற்றப்பட்டதாகவும் கூறிய பிரதாப் ரெட்டி, முதல்வர் சிகிச்சை பெற்ற காட்சிகளைப் பிறரும் பார்க்க வேண்டாமே என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டதாகக் கூறினார்.

மருத்துவமனையில் எங்கள் கொள்கை மிக எளிதானது. தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். நோயாளிகளின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் சிறிது நேரம் வந்து பார்க்கலாம்.

ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமாக இருந்ததால் நாங்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. யாராவது சிலரை அனுமதிக்கும்படி நெருங்கிய உறவினர்கள் கோரலாம். அப்போது பணியில் இருக்கும் மருத்துவர் அதற்கு அனுமதிக்கலாம்” என்றார் பிரதாப் ரெட்டி.

_100528632_appp ஜெயலலிதா சிகிச்சையின் போது சிசிடிவியை அணைத்து வைத்திருந்தது ஏன்? - பிரதாப் ரெட்டி விளக்கம் ஜெயலலிதா சிகிச்சையின் போது சிசிடிவியை அணைத்து வைத்திருந்தது ஏன்? - பிரதாப் ரெட்டி விளக்கம் 100528632 appp

எவ்வளவோ சிறந்த சிகிச்சையை அளித்தும் ஜெயலலிதாவைக் காப்பாற்ற முடியவில்லையென்றும் பிரதாப் ரெட்டி கூறினார். “ஜெயலலிதா பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தொழில்நுட்பப் பணியாளரில் துவங்கி, மருத்துவர்கள் வரை, எல்லோருமே அவரைச் சிறப்பாகக் கவனித்துக்கொண்டனர். அவர் குணம்பெற்றுவிடுவார் என்று நாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம்” என்றார் பிரதாப் ரெட்டி.

மேலும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் அழைத்தால், ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கமளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தார்.

அவரது மரணம் குறித்து பல தரப்பினரும் சந்தேகங்களை எழுப்பியதால், அது குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.