மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!

நான் வயிற்றில் சுமந்த குழந்தை, நான் பெற்றெடுத்த என் மகனின் குழந்தை” இப்படி ஒரு பெண் சொன்னால் நமக்கு என்ன தோன்றும்? சிலருக்கு அருவருப்பு ஏற்படலாம்; சிலர் ஆச்சர்யப்படலாம், குழப்பம்கூட அடையலாம். அந்தத் தாய் இப்படி ஒரு காரியம் செய்யத் துணிந்ததற்கு அழுத்தமான காரணமிருக்கிறது.

வாடகைத்தாய்

”வாரீர்! அணைத்து மகிழ வேண்டாமோ?
பாரீர் அள்ளிப் பருகமாட்டோமோ?
செம்பவழத்து சிமிழ்சாய்ந்த அமுதாய்ச்
சிரித்தது, பிள்ளை சிரிக்கையில்
சிரித்தது வையம்! சிரித்தது வானமே!”

என்று பாரதிதாசன் குழந்தையின் சிரிப்பை அழகாக வர்ணிக்கிறார். யாருக்குத்தான் குழந்தைகளைப் பிடிக்காது? நம்மை உலகையே மறக்கச்செய்யும் மாயவித்தை தெரியும் மழலைக்கு. நம் நாட்டிலும் குழந்தை வரம் வேண்டி, கோயில் கோயிலாகச் சுற்றிக் கடவுளிடம் வேண்டிக்கொள்வது ஒருபக்கம் நடக்கிறது; இன்னொரு பக்கம் குழந்தைப்பேற்றுக்காக மருத்துவ முறையிலும் சிலர் முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இந்தியாவில் வாடகைத்தாய் முறை பிரபலமடையவில்லை. ஆனாலும், வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பிறந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஒரு தாய், தனது மகனுக்காக வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுத்த நிகழ்வு நடந்திருப்பது அமெரிக்காவில்! அர்கான்சஸ் மாகாணத்தில் வசிப்பவர் கெய்லா ஜோன்ஸ் (Kayla Jones). வயது 29. அவருக்கும் அவரது கணவருக்கும் குழந்தையில்லையே என்கிற ஏக்கம். காரணம், கெய்லாவுக்கு 17 வயது இருக்கும்போதே, ஏதோ ஒரு நோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டார். அந்தச் சூழ்நிலையில் அவருடைய கர்ப்பப்பையில் (Uterus) பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்கியிருக்கிறார்கள் மருத்துவர்கள். `இனி அவரால் குழந்தையை வயிற்றில் சுமக்க முடியாது’ என்பதையும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், கெய்லாவின் கருமுட்டைப்பை (Ovary) நீக்கப்பட்டிருக்கவில்லை. அதனால் அவரின் கருமுட்டையைக் (Ovum) எடுத்து, குழந்தையைப் பெற அவருக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. எனவே, ஒரு வாடகைத்தாயை அமர்த்திக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள ஜோன்ஸ் தம்பதி முடிவெடுத்தார்கள்.

Surrogacy for her own son

வாடகைத்தாய் கிடைப்பது அத்தனை எளிதான காரியமாக இல்லை. பல இடங்களில் தேடி அலைந்தார்கள். ஆனால், பொருத்தமான, நம்பிக்கையான வாடகைத்தாய் யாரும் கிடைக்கவில்லை. வீட்டுக்கு அருகிலேயே ஒரு வாடகைத்தாய் கிடைத்தால், அவர்களின் நேரடிப் பார்வையில் வாடகைத்தாயை பிரசவம் வரை பார்த்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம். மகனும் மருமகளும் குழந்தைக்காகப் படும் அவஸ்தைகளை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்  பேட்டி (Patty). ஒருநாள் கெய்லா ஜோன்ஸிடம் தயக்கத்தோடு பேட்டி சொன்னார்… “நீங்கள் சொல்லும் நிபந்தனைகளுக்கெல்லாம் யாருமே ஒத்துவர மாட்டார்கள். நான் வேண்டுமானால் வாடைகைத்தாயாக உன் குழந்தையை சுமக்கட்டுமா?” முதலில் கெய்லாவும் அவர் கணவரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், யோசித்துப் பார்த்ததில் அது சாத்தியமானால் நல்லதுதானே என்றும் தோன்றியது. குடும்பத்தில் எல்லோரும் கூடிப் பேசி, பேட்டி வாடகைத்தாயாக முடியுமானால் அப்படியே நடக்கட்டும் என்கிற முடிவுக்கு வந்தார்கள். முதல்கட்டமாக, 50 வயதான பேட்டிக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. `அவருக்குக் குழந்தையைச் சுமக்க்கும் அளவுக்கு உடம்பில் தெம்பிருக்கிறது, ஆரோக்கியமாக இருக்கிறார்’ என்று சோதனை முடிவில் தெரியவந்தது.

ஐ.வி.எஃப் (IVF – In vitro fertilization) எனப்படும் பெண்ணின் கருமுட்டைக்குள் விந்தணுவை செயற்கையாகச் செலுத்தி, அதன் பிறகு, கருமுட்டையை வாடகைத்தாயின் கர்ப்பப்பைக்குள் வைக்கும் முறையான செயற்கை கருவூட்டலை மருத்துவர்கள் பேட்டிக்குச் செய்தார்கள். முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இரண்டாம் முயற்சியில், 2017, மே மாதம் பேட்டி கருவுற்றார். குடும்பமே மகிழ்சியில் திளைத்தது.

kayla jones uses mother in law as surrogacy

2017, டிசம்பர் 30-ம் தேதி பேட்டி, அவரது மகனின் மகனை அறுவைசிகிச்சை மூலம் பெற்றெடுத்தார். குழந்தைக்கு க்ராஸ் ஆலன் ஜோன்ஸ் (Kross Allen Jones) என்று பெயர் வைத்தார்கள். குழந்தையை முதன்முதலில் கையில் வாங்கிய கெய்லா ஜோன்ஸ், “இப்போது என் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. என் மகன் கிராஸ் இனிப்பான அதிசயம். வாடகைத்தாய் முறையில் இவனை பெறுவதற்குள் நாங்கள் பல துன்பங்களை அனுபவித்துவிட்டோம். நாங்கள் வேதனையோடு கண்ணீர் வடித்த அத்தனை துன்பங்களுக்கும் பரிசாக, காணிக்கையாக இவன் கிடைத்திருக்கிறான். இவனோடு ஒப்பிட்டால் எங்கள் கஷ்டமெல்லாம் ஒன்றுமேயில்லை. எங்கள் துன்பங்கள் அனைத்தும் ஒரு நொடியில் மாயமாகிவிட்டன” என்று ஆனந்தக் கண்ணீர்விட்டிருக்கிறார்.

“குழந்தைப்பேறின்மை, குழந்தை பெற்றுகொள்வதற்கான அனைத்து வழிகளையும் எங்களுக்குக் காண்பித்துவிட்டது. எங்கள் கதையைக் கேட்பவர்கள் பலவிதமாகப் பேசுகிறார்கள். சிலர், `இது இயற்கைக்கு புறம்பானது’ என்று குற்றம் சாட்டுகிறார்கள். எங்கள்நிலையில் இருந்து யோசித்துப் பார்த்தால், அவர்களுக்கு இது இயற்கைக்கு புறம்பானதாகத் தெரியாது” என்று வருத்தத்துடன் சொல்லியிருக்கிறார் கெய்லா ஜோன்ஸ்.

குழந்தையைப் பெற்றெடுத்த பேட்டி,“இப்போது நான் சந்தோஷத்தின் உச்சத்தை உணர்கிறேன். என் மகன், மருமகளுக்காக நான் எனது பேரனை வயிற்றில் சுமந்ததைப் பெரிய வெகுமதியாகக் கருதுகிறேன். எங்கள் குடும்பமே இப்போது ஆசீர்வதிக்கப்பட்டதைப்போல் உணர்கிறேன்” என்று நெகிழ்ந்திருக்கிறார். 50 வயதிலும் தன் மகனின் மகனைச் சுமந்த பேட்டியின் தாயுள்ளம் போற்றுதலுக்குரியது.