மகளுடன் உயிரை மாய்த்துக்கொண்ட வங்கி அதிகாரி!

திருச்சியில் தனியார் வங்கி அதிகாரி ஒருவர், தனது மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமசுப்ரமணியன்
திருச்சி சத்திரம் பூசாரி தெருவில் உள்ள கணேஷ் தர்ஷனா நகர், மங்கலம் அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்தவர்  ராமசுப்ரமணியன். 37 வயதான இவர்  சிண்டிகேட் வங்கி மேலாளராகப் பணியாற்றி வந்தார்.
 இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல இவர்  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.சி கல்லூரி அருகே, தான் வேலை பார்க்கும் சிண்டிகேட் வங்கிக்குப் பணிக்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் மதியம் வீடு திரும்பிய ராமசுப்ரமணியன், வீட்டுக்குள் சென்றவர், தனது 5 வயது மகள் ஆருத்ராவுடன் இருந்தார்.
இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த அவரின் மனைவி கோமதி என்கிற ஆவுடையம்மாள் பூட்டிக்கிடந்த வீட்டின் கதவைத் தட்டியபோது திறக்காததால் கதவின் துவாரம் வழியாக பார்த்தபோது தூக்குப்போட்ட நிலையில்  ராமசுப்ரமணியன் தொங்கியது தெரிந்துள்ளது. அதனையடுத்து கோமதி, சத்தம் போட்டு கதறி அழவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, கதவை  உடைத்துப் பார்த்தபோது ராமசுப்ரமணியனும் அவரது மகள் ஆருத்திராவும் தூக்குப்போட்ட நிலையில் தொங்கியுள்ளனர்.
அதனையடுத்து இருவரையும் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூற அதனைக் கேட்ட கோமதி கதறியபடி, ரோட்டுக்கு ஓடி அந்த வழியே வந்த வாகனங்களை நோக்கிப் பாயப் போனதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த திருச்சி கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டை காவல் ஆய்வாளர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகின்றார்.
போலீசார் விசாரணையில், இன்று மதியம்   ராமசுப்ரமணியன் வேலை பார்க்கும் சிண்டிகேட்  வங்கியில் இருந்து வெளியே வந்தவர், அதிகாரிகளை நோக்கி, உங்களிடம் வேலை  பார்ப்பதற்கு தூக்குப்போட்டு செத்துடலாம் என்று திட்டிக்கொண்டே வெளியேறியதாகக் கூறப்படுகிறது. மேலும் ராமசுப்ரமணியன் ஏன் ஆருத்ராவுடன் தற்கொலை செய்துகொண்டார். அவரின் மரணத்துக்கு வேறு காரணம் உண்டா என்கிற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரு வங்கி அதிகாரி, மகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.