ஒரு ஃபேஸ்புக் பதிவால் தமிழகம் முழுவதும் பதட்ட நிலையை ஏற்படுத்த முடியுமா? அதைத்தான் செய்தது பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் பதிவு. திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல தமிழகத்தில் பெரியார் சிலைகளும் அகற்றப்படும் என்று அவரது முகநூல் பக்கத்தில் இருந்த பதிவினால் தமிழகம் முழுவதும் பதட்டமான சூழல் உருவானது. அதே சமயம் வேலூர் அருகே சில மர்ம நபர்களால் பெரியார் சிலையும் சேதப்படுத்தப்பட்டது. இதற்கிடையே ஹெச்.ராஜாவின் முகநூலில் இருந்த பதிவும் நீக்கப்பட்டது. தனது முகநூல் பக்க நிர்வாகிதான் அந்தப் பதிவை தன்னுடைய அனுமதியின்றி எழுதிவிட்டதாகத் தெரிவித்தார் ஹெச்.ராஜா.தனது அட்மினின் செயலுக்கு வருத்தம் தெரிவித்தவர், அந்த அட்மினையும் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதற்கிடையே தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உட்பட பல கட்சிகள் ராஜாவின் முகநூலில் இருந்த கருத்துக்கு வலுத்த கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் சமூக இடையூறு ஏற்படுத்தும் வகையில் முகநூலில் பதிவிட்டிருந்த ஹெச்.ராஜா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர்கள் வலியுறுத்தி வந்தார்கள். பி.ஜே.பி-யின் தமிழகப் பிரிவும் ‘ஹெச்.ராஜாவின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து’ எனக்கூறி சர்ச்சை விவகாரத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டது.
இதற்கிடையே சில இந்துத்துவா அமைப்புகள் உத்திரபிரதேசத்திலிருந்து தமிழகத்தின் இராமேஸ்வரம் வரை ராம ராஜ்ஜிய யாத்திரை என்கிற பெயரில் ரத யாத்திரை மேற்கொண்டுள்ளன. இதன் சமயத்திலும் தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டது. இதற்குக் கண்டனம் தெரிவித்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா, அதையடுத்து தனது முகநூல் பக்கத்தில் ஒரு பாடல் வீடியோவை வெளியிட்டார். எழுத்தாளர் பெருமாள் முருகனால் எழுதப்பட்டிருக்கும் அந்தப்பாடலை டி.எம்.கிருஷ்ணா பாடியிருக்கிறார். அந்த வீடியோவில், ”அண்மைக்காலமாக இந்தியா எங்கும் பரவலாக சிலை உடைப்பு என்கிற பெயரில் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. நாடெங்கிலும் லெனின், அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வன்முறையை ஏற்படுத்துபவர்கள் ஒற்றைச் சித்தாந்தத்தைப் பின்பற்றும் ஓர் அழகற்ற இந்தியாவை நிர்மாணிக்க நினைக்கிறார்கள். நாம்தான் ஒன்றிணைந்து இந்த முட்டாள்தனத்தை நிறுத்தவேண்டும். ஏனென்றால் லெனின், அம்பேத்கர், பெரியார், காந்தி போன்ற மாபெரும் தலைவர்கள் சமூகத்தையும் நம்மையும் வெவ்வேறு கோணங்களில் பார்ப்பதற்கு வழிவகையாக இருந்தார்கள். இவர்களின் சிலைகளைச் சேதப்படுத்தியதன் வழியாக வன்முறையாளர்களும் அவர்களுக்குத் துணை நின்றவர்களும், தங்களால் வெவ்வேறு சிந்தனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பதையே நமக்கு உணர்த்துகிறார்கள்” என்றார்.
பெருமாள் முருகன் எழுதி டி.எம்.கிருஷ்ணா பாடிய அந்த வரிகள்…
‘சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்
கலையே காலம் போற்றும் செல்வம்
அலைமோதும் கற்பனை கொண்டு
விலையில்லா உழைப்பில் வடித்த
சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்
கலையே காலம் போற்றும் செல்வம்
மலைமேல் கோவிலில் மறைந்து நின்று
மனத்தை மயக்கும் கடவுளர் எனினும்
சாலை நடுவில் சிறந்து நின்று
சரித்திரம் பேசும் பெரியார் எனினும்
சிலைகள் எல்லாம் கலையின் வடிவம்
கலையே காலம் போற்றும் செல்வம்’
– இவ்வரிகளை எழுதிய பெருமாள் முருகன் கூறுகையில், “நான் எழுதிய வரிகளுக்கு ஏற்கெனவே டி.எம்.கிருஷ்ணா இசையமைத்துப் பாடியிருக்கிறார். அண்மையில் கொச்சின் இலக்கிய விழாவில் கிருஷ்ணா உரையாற்றினார். அப்போது வேலூர் அருகே பெரியார் சிலை உடைக்கப்பட்டதையும் அந்த சிலை வடிவமைக்கப்பட்டதன் பின்னால் இருந்த கலைஞனின் உழைப்பையும் பற்றிப் பேசினார். ‘சிலைகள் சமூகத்தின் பொக்கிஷம். அவற்றை உடைப்பது அந்தக் கலைஞனை அவமதிப்பதாகும். மேலும் சமூகத்தின் பொக்கிஷத்தைச் சீர்குலைப்பது ஜனநாயகத்தை வேரறுக்கும் செயல்’ என்றார். அந்தக் கருத்து எனக்குப் பிடித்திருந்ததால், அதனைக் கீர்த்தனையாக மாற்றிக் கொடுத்தேன்” என்றார்.
முகநூலில் பதிவு எழுதிய ஹெச்.ராஜா அவர்களின் அட்மின் கவனத்துக்கு!