எலும்புகள் உறுதியாக இதையெல்லாம் பின்பற்றலாம்!

இன்றைய வாழ்க்கை முறைகள் உடலுழைப்பை பெரும்பாலும் குறைத்துவிட்டது. உட்கார்ந்த இடத்தில் வேலை, வீட்டு வேலைகளுக்குக்கூட யந்திரங்கள், வாகனப் பயணங்கள் என்று உழைப்பேத் தேவைப்படாத வாழக்கையை வாழ்ந்து வருகிறோம். இதனால் ஏகப்பட்ட நோய்களையும் பெற்றுக்கொள்கிறோம். குறிப்பாக எலும்பு சம்பந்தமான பல நோய்கள் இளம்வயதிலேயே உருவாகி விடுகிறது. முதுகு வலி, கைகால் மூட்டு வலி என்று அவதிப்படுகிறோம். எலும்புகள் உறுதியாக இல்லாததால்தான் இந்த மாதிரியான தொல்லைகள் வருகின்றன என்று மருத்துவம் கூறுகிறது. சரி உறுதியான எலும்புகளைப் பெற என்ன செய்யலாம்? பார்ப்போம்…

எலும்புகள்

உறுதியான எலும்புகளைப்பெற கால்சியம், வைட்டமின் டி சத்துக்கள் அதிகம் தேவைப்படுகிறது. அதை இயற்கையாகப் பெற சூரிய ஒளி அவசியமாகிறது. எனவே தினமும் 15 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்க வேண்டும். இதனால் வைட்டமின் டி கிடைக்கிறது. நமது உணவில் பூண்டு மற்றும் வெங்காயம் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் எலும்புகள் வலுவாகும். டீ, காபியைக் குறைத்துக்கொண்டு சுத்தமான  பால், மோர், சூப் அருந்தலாம்.  இறைச்சியைக் குறைத்துக்கொண்டு கீரை, தானிய உணவுகள், பழங்கள், காய்கள் உண்ணலாம். கட்டாயமாக தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, நீச்சல் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டால் எலும்புகள் வலிமைப்பெறும். சோடா மற்றும் கோலா பானங்களை தவிர்த்துவிட வேண்டும். மது, புகை போன்றவைகளை அறவே ஒழிக்க வேண்டும். மின்தூக்கிகளை மறுத்துவிட்டு மாடிப்படிகளில் ஏறிச்செல்ல பழக வேண்டும். ஓய்வு நேரங்களில் உட்கார்ந்தே இருக்காமல் பிடித்த விளையாட்டுகளை விளையாட வேண்டும். கால் பந்து, கிரிக்கெட், பேட்-மிட்டன் போன்ற விளையாட்டுகள் உங்கள் எலும்புகளை வலுவாக்கி நோயற்ற வாழ்வைத்தரும் என்பது உறுதி.