பிரான்ஸ்: பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளாக மக்கள் பிடித்துவைப்பு – இருவர் பலி

பிரான்சின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் பொதுமக்கள் பலரைபிணைக்கைதிகளாக வைத்துள்ளார். இதில் இருவர் இறந்துள்ளதாக நம்பப்படுகிறது.

அப்பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போலீசாரை நோக்கி நபரொருவர் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததாக பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கார்கசோன் என்ற பகுதிக்கு அருகிலுள்ள அந்த பல்பொருள் அங்காடிக்கு சிறப்பு போலீஸ் படைகள் விரைந்துள்ளன.

துப்பாக்கியை வைத்துள்ளவர் ஐ எஸ் அமைப்பை சேர்ந்தவராக இருக்கலாம் என்று வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் ஃபிரான்சிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் ஜிகாதிய துப்பாக்கித்தாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்தனர்.

இந்த சூழ்நிலை “தீவிரமானது” என்று அந்நாட்டின் பிரதமர் எய்துவார் பிலிப் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகங்கள் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கூறினாலும் அதை அரசாங்க அதிகாரிகள் இன்னும் உறுதி செய்யவில்லை.

_100543106_d6ea2a02-50df-4b86-b11e-bb8a1d69a698  பிரான்ஸ்: பல்பொருள் அங்காடியில் பிணைக்கைதிகளாக மக்கள் பிடித்துவைப்பு - இருவர் பலி 100543106 d6ea2a02 50df 4b86 b11e bb8a1d69a698

இதுவரை பிரான்சில் நடந்த முக்கியமான தாக்குதல்கள்

அக்டோபர் 1, 2017 – மார்சே ரயில் நிலையத்தில் இரண்டு பெண்கள் குத்தி கொல்லப்பட்டனர். இதற்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.

ஜூலை 26, 2016 – நார்மண்டியிலுள்ள தேவாலயத்தில் இரண்டு தாக்குதலாளிகள் மதகுரு ஒருவரின் தொண்டையை அறுத்தனர். தாக்குதலாளிகள் இருவரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜூலை 14, 2016 – நைஸ் கடற்கரையோர பகுதியில் பாஸ்ட்டீல் தின கொண்டாட்டத்தின்போது, மக்கள் அதிகளவில் குழுமியிருந்த இடத்தில் லாரி ஒன்றை கொண்டு ஏற்றியதில் 86 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது; தாக்குதலாளி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜூன் 13, 2016 – மான்யாங்வில் பகுதியில் போலீஸ் ஒருவரும், அவரது இணையும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர் எனக் கூறிய ஜிகாதி ஒருவரால் குத்திக் கொல்லப்பட்டார். பிறகு, அவர் போலீசால் கொல்லப்பட்டார்.

நவம்பர் 13, 2015 – ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த ஜிகாதிகள் பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடத்திய தாக்குதலில் 130 உயிரிழந்தனர், 350 பேர் காயமுற்றனர்.

ஜனவரி 7-9, 2015 – பிரெஞ்சு மொழி இதழான சார்லி ஹெப்டோவில் இரண்டு இஸ்லாமிய துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். அதற்கடுத்த தினங்களில் நடந்த தாக்குதல்களில் ஒரு போலீஸ் உள்பட ஐந்து பேரும், தாக்குதலாளிகளும் கொல்லப்பட்டனர்.