‘ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்துவரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் மார்ச் 12-ம் தேதியன்று சசிகலா எழுத்து மூலமாகத் தன்னுடைய பிரமாணப் பத்திரத்தை வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்தார்.
55 பக்கங்கள் கொண்ட சீலிடப்பட்ட அந்த ஆவணத்தை வழக்கறிஞர்கள், விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்தனர்.
அதில், செப்டம்பர் 22-ம் தேதி அன்று, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவை வேதா நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது முதல் அவர் மரணம் அடைந்த டிசம்பர் 5-ம் தேதி வரை நடந்தவை என்ன என்பது பற்றி விலாவாரியாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்த பிரமாணப் பத்திரத்தில் வாக்குமூலமாக சசிகலா கூறி இருப்பது என்ன என்ற செய்திகள் வெளியே கசிந்தன.
அதில், ”ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சில நாள்களில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளைச் சந்தித்தார்.
ஓ.பன்னீர்செல்வம், மு.தம்பிதுரை, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் செப்டம்பர் 22-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையிலான நாள்களில் ஜெயலலிதாவை அவர்கள் பார்த்தனர்.
செப்டம்பர் 27-ம் தேதி ஸ்கேன் செய்வதற்காக, ஜெயலலிதாவை அழைத்துச் சென்றபோது, அவருடைய தனி பாதுகாப்பு அதிகாரிகள் வீரபெருமாள், பெருமாள்சாமி ஆகியோரிடம் ஜெயலலிதா பேசினார்.
அதை, தூரத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை, விஜயபாஸ்கர் ஆகியோர் பார்த்தனர். நவம்பர் 19-ம் தேதி ஜெயலலிதாவைத் தனி அறைக்கு மாற்றும்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் மற்றும் சில அமைச்சர்கள் பார்த்தனர்.
சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த 20 மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்தனர். அந்தப் பட்டியலையும் பிரமாணப்பத்திரத்தில் தந்துள்ளேன்” என்று சசிகலா வாக்குமூலம் அளித்ததாகச் சொல்லப்பட்டது. இது குறித்து ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சசிகலா வாக்குமூலம் என வெளியான செய்திகளில் 70 சதவிகிதம் உண்மை இல்லை என்று விசாரணை ஆணையம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது.
அதில், ”விசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த வாக்குமூலத்தை நீதிபதி ஆறுமுகசாமி முழுமையாகப் படித்துவிட்டார்.
இது தொடர்பாக வெளியான செய்திகளில் 30 சதவிகித செய்தி மட்டுமே உண்மை. 70 சதவிகிதத் தகவல்கள் தவறானவை. அதில், எது உண்மை; எது தவறு என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், நிலோஃபர் கபில் ஆகியோர் பார்த்ததாக வெளியான தகவல் குறித்து சசிகலா வாக்குமூலத்தில் எதுவும் இல்லை.
20 மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாகக் கூறப்படும் தகவலும் தவறானவை. சசிகலா தரப்பை நியாயப்படுத்த அவரது தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட தகவலாகவே ஆணையம் இதைக் கருதுகிறது.
சசிகலா பரோலில் வந்துள்ள நிலையில், இப்படி செய்தி வெளியாகி இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. வாக்குமூலத்தில் இல்லாத விஷயங்களை அளித்தது குறித்தும் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
பன்னீர்செல்வம்
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை ஓ.பன்னீர்செல்வம் பார்த்தார் என்று வந்துள்ள செய்தியைப் பார்த்து விசாரணை ஆணையமே பதறி விளக்கம் அளித்துள்ளது. அதாவது, ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கேட்டு தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம், ”நோய்த்தொற்று ஏற்பட்டுவிடும் என்று எங்களைப் பயமுறுத்தி ஜெயலலிதாவைப் பார்க்கவிடவில்லை.
நானோ, மற்ற அமைச்சர்களோ மருத்துமனையில் ஜெயலலிதாவைப் பார்க்கவில்லை” என்று பல தடவை ஓ.பன்னீர்செல்வம் கூறிவிட்டார்.
இந்த நிலையில், சசிகலாவின் வாக்குமூலத்தில் ஓ.பன்னீர்செல்வம், மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்த்தார் என்று செய்தி வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, இந்தப் பிரச்னையில் விசாரணை ஆணையமே விளக்கம் அளித்திருப்பது மேலும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.
இந்நிலையில், அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி, நேற்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்து கூறுகையில் ” ஜெயலலிதாவோடு மருத்துவமனையில் தங்கி இருந்தவர்கள் கூறியதன் அடிப்படையில் முக்கியஸ்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதும் அந்த வார்டில் இருந்த மற்ற நோயாளிகளை வேறு வார்டுகளுக்கு மாற்றினோம். அங்கிருந்த 24 அறைகளில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட ஓர் அறை மட்டுமே செயல்பாட்டில் இருந்தது.
இதனால், அப்பகுதி சிசிடிவி பதிவுகளைத் தேவையில்லாமல் வேறு யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அழித்துவிட்டார்கள்’ என்றார்.
முதலில் சிசிடிவி கேமராக்களை ஸ்விச் ஆஃப் செய்துவிட்டார்கள் என்று கூறிய பிரதாப் ரெட்டி இறுதியில் சிசிடிவி பதிவுகளை அழித்துவிட்டார்கள் (removed footages) என்று முன்னுக்கு முரணாகக் கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
யார் சொல்வது உண்மை..? நீதி வெல்லட்டும்..!