போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டருடன் நடுரோட்டில் சண்டைபோட்ட வாலிபர்!- (வீடியோ)

சென்னையில் போக்குவரத்து காவலர்கள் 100ரூபாய் லஞ்சம் கேட்டு இளைஞரை தாக்கிய வீடியோ சமுக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உதவி ஆய்வாளர் ஒருவர் 4 போக்குவரத்து காவலருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கு வந்த இளைஞரிடம் 100 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் தர மறுத்ததால் அவர்களை ஆய்வாளர் தாக்கியதாக கூறி வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் கடந்த 21ம் தேதி நடந்ததாகவும், போக்குவரத்து போலீசார் 100 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் தர மறுத்த இளைஞரை தாக்கியதாகவும்  தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாகன ஓட்டிகள் உதவி ஆய்வாளரை செல்போனில் படம் பிடிக்க முற்படுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் பொதுமக்களின் செல்போனை பறிக்க முயல்கிறார்.

அதில் ஒருவர் போக்குவரத்து உதவி ஆய்வாளரின் இரு கைகளையும் பின்னால் இருந்து பிடித்து கொண்டு இப்போது போட்டோ எடுங்கள் என்கிறார்.

சக போக்குவரத்து போலீசார் உடனடியாக அந்த இளைஞரின் கைகளை உதறிவிட்டு உதவி ஆய்வாளரை மீட்கிறார்கள். அப்போது போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கையை கண்டு கோபமடைந்த சிலர் காவலர்களை கடுமையாக திட்டுகின்றனர்.

இவ்வளவு நடந்தும் அந்த இளைஞர்களை போக்குவரத்து போலீசார் ஏதும் செய்யவில்லை என்பது தெரிகிறது.

போலீசார் மீது தவறில்லை என்றால் நிச்சயம் அவர்களை சும்மா விட்டிருக்க போவதில்லை இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் 100 ரூபாய் கேட்டதாகவும் போடப்பட்டிருகிறது.

தொடர்ந்து போக்குவரத்து போலீசார் பொது மக்களிடம் அத்துமீறி செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் வாடகை கார் ஓட்டுநர் மணிகண்டன் என்பவர் வேளச்சேரி போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவரால் தாக்கபட்டதால் மனமுடைந்து சாலையிலேயே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.