ஒருவர் தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதை பரிசோதனையின் மூலம் அறிந்துவிட்டால், அதன் பின் அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனமாக இருக்க வேண்டும். அதுவும் இனிமேல் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.அப்படி கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், அதனால் பல்வேறு தீவிரமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அதில் ஹைப்போ க்ளைசீமியா, இதய நோய், நரம்பு பாதிப்பு மற்றும் பார்வை பிரச்சனைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.தற்போது ஒருவரது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால் உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்பதைக் காணலாம்.
தொடர்ச்சியான தாகம்:
ஒருவரது உடலில் இரத்த சர்ககரை அளவு அதிகமாக இருந்தால், தாகம் அதிகமாக எடுக்கும். அதாவது வழக்கத்திற்கு மாறாக திடீரென்று அளவுக்கு அதிகமாக தண்ணீரைக் குடிக்க ஆரம்பிப்பீர்கள்.
இதற்கு முக்கிய காரணம், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, சிறுநீரகங்களால் சரியாக செயல்பட முடியாமல், அதிகமான அளவில் சிறுநீர் உற்பத்தி செய்யப்பட்டு, இரத்தத்தில் இருந்து க்ளுக்கோஸானது பிரித்து வெளியேற்ற முடியாமல் போகும். இந்நிலையில் உடல் வறட்சி ஏற்பட்டு, அளவுக்கு அதிகமாக தாகமும் எடுக்க ஆரம்பிக்கும்.
இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகி இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்க வேண்டும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது:
நீங்கள் வழக்கத்திற்கு மாறாக அளவுக்கு அதிகமாக கழிவறைக்கு செல்ல நேரிடுகிறதா? அப்படியானால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு இல்லாமல் அதிகரித்து உள்ளது என்று அர்த்தம்.
எவ்வளவுக்கு எவ்வளவு சிறுநீர் கழிக்கிறோமோ, அவ்வளவு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். அதிலும் ஒருவருக்கு அதிக தாகம் எடுத்து, அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிட்டால், கட்டாயம் அவர்களது இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதென்றே அர்த்தம்.மிகுதியான சோர்வு:
இதுவரை அன்றாடம் செய்து வந்த செயல்களைக் கூட செய்ய முடியாத அளவு உடல் மிகவும் களைப்புடன் இருந்தால் மற்றும் சிறு வேலை செய்தாலும் சோர்ந்துவிட்டால், அவரது இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடின்றி அதிகமாக உள்ளது என்று அர்த்தம். எப்போது ஒருவரது உடலில் இன்சுலினானது முறையாக செயல்படுத்த முடியாமல் உள்ளதோ, அப்போது இரத்த சர்க்கரை அளவு அப்படியே இரத்தத்தில் தேங்க ஆரம்பிக்கும்.
காயங்கள் தாமதமாக குணமாவது:
உங்களுக்கு திடீரென்று சிறு காயங்கள் ஏற்பட்டு, அந்த காயங்கள் விரைவில் குணமாகாமல் இருந்தால், உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம். சில சமயங்களில் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்தால், அதனால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, இரத்த ஓட்டத்திலும் தடை ஏற்படும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டு, அது குணமாவதற்கு தாமதமானால், அவ்விடத்தில் தொற்றுக்களின் தாக்கம் அதிகரித்து, நிலைமை இன்னும் மோசமாகும் வாய்ப்புள்ளது. எனவே இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை:
கட்டுப்பாடு இல்லாத இரத்த சர்க்கரை அளவு நியூரோபதி என்னும் நரம்பு பாதிப்பை உண்டாக்கும். உயர் இரத்த சர்க்கரை அளவு நரம்பு திசுக்களுக்கு சேதத்தை உண்டாக்கி, இரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தும்.
இதன் விளைவாக கைகள் மற்றும் பாதங்களில் உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வை சந்திக்கக்கூடும். சில சமயங்களில் கால் மற்றும் பாதங்களில் உள்ள தசைகள் பலவீனமாகி, நிலையாக நிற்க முடியாமல் செய்யும்.
மங்கலான பார்வை
உங்களுக்கு திடீரென்று பார்வை பிரச்சனைகளான மங்கலான பார்வை ஏற்பட்டால், நீங்கள் இரத்த சர்க்கரை அளவை சரியாக பராமரிப்பதில்லை என்று அர்த்தம். உயர் இரதத் அழுத்தம் கண்களின் பின்புறத்தில் உள்ள திசுக்களைப் பாதித்து, கண் பார்வை பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.ஆகவே உங்களுக்கு திடீரென்று கண்கள் மங்கலாக தெரிய ஆரம்பித்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
வாயில் பிரச்சனைகள்:
நீங்கள் நல்ல வாய் சுகாதாரத்தைப் பராமரித்தும், உங்கள் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், உடனே இரத்த சர்க்கரை அளவைப் பரிசோதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். ஏனெனில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், பல்வேறு வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவற்றை சந்திக்க நேரிடும்.
ஏனெனில் உயர் இரத்த சர்க்கரை அளவானது பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி, தொற்றுக்களை பெரிதாக்கும். எப்போது ஒருவர் பற்களைத் துலக்கும் போது ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுகிறதோ, அப்போது உடனே மருத்துவரை அணுக வேண்டியது மிகவும் அவசியம்.
அதிகப்படியான சரும வறட்சி:
சரும வறட்சி அளவுக்கு அதிகமாக இருந்தால், உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. உயர் இரத்த சர்க்கரையானது நரம்பு பாதிப்பை உண்டாக்கி, சரும வறட்சியை அதிகமாக்கும். மேலும் உயர் இரத்த சர்க்கரை அளவானது உடலில் நீர்ச்சத்தின் அளவைக் குறைத்து, சருமத்தில் ஈரப்பசையைக் குறைத்து, வறட்சியுடன், அரிப்பையும் உண்டாக்கும். சில சமயங்களில் கழுத்து, அக்குள், அந்தரங்கப் பகுதிகளில் கருமையான படலம் ஏற்படலாம்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க சில டிப்ஸ்…
மன அழுத்தம் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் அன்றாடம் ஈடுபட வேண்டும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஜூஸ் மற்றும் சோடா பானங்களுக்கு பதிலாக நீரைக் குடிப்பதே சிறந்தது.
தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம்இ இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
தினமும் 3 முறை 10 நிமிட வாக்கிங் பயிற்சியை மேற்கொள்வது மிகவும் நல்லது.
எந்த ஒரு மருந்தை எடுப்பதற்கு முன்பும் மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றைத் தவிர்த்திடுங்கள்.
அடிக்கடி இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தத்தை பரிசோதித்து வர வேண்டியது அவசியம்.
மருந்துகள் மற்றும் இன்சுலினை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். ஒருவேளை நன்றாக இருப்பது போல் இருந்தாலும், தவறாமல் எடுக்க வேண்டும்.