கோர விபத்து : பொலிஸாரின் தவறால் பரிதாபமாக பலியான இளைஞன்!

சாவகச்சேரி ஏ9 வீதி புளியடி சந்தியில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் இன்று இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதனால் சற்று பதற்ற நிலை நிலவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தில் வெள்ளாம் போக்கட்டி கொடிகாமத்தை சேர்ந்த சிவயோகலிங்கம் மயூரன்(வயது 27) என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

சாவகச்சேரி போக்குவரத்து பொலிஸாரின் தவறினாலேயே சம்பவம் நிகழ்ந்துள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் கார் ஒன்றை மறித்துள்ளனர். இதன்போது, கார் சடுதியாக நிறுத்தப்பட, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் காரினை விலக்கி செல்ல முற்பட்டுள்ளார்.

இந்நிலையில், பின்னால் வந்த இராணுவ பஸ் மோதி இளைஞன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதையடுத்து விபத்து இடம்பெற்ற இடத்தில் பெருந்திரளான மக்கள் கூடி சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸார் சடலத்தை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், விபத்து இடம்பெற்று 30 நிமிடங்களுக்குள் விபத்து ஏற்பட காரணமான கார் மற்றும் இராணுவ பேருந்தினையும் அப்பகுதியில் இருந்து அகற்றியுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.