தஞ்சாவூர்: சசிகலாவின் பரோல் விடுப்பு முடிவதற்கு இன்னும் 11 நாட்கள் இருக்கின்றன. நடராஜன் உடல் அடக்கம் முடிந்த அன்று இரவில் இருந்தே பஞ்சாயத்துகள் தொடங்கிவிட்டன என்கின்றனர் குடும்ப கோஷ்டிகள்.
‘ அதிகாரத்தில் உள்ளவர்களை அசைக்கும்விதமாக அடுத்து வரும் நாட்களை பயன்படுத்திக் கொள்ள இருக்கிறார் சசிகலா’ என்கின்றனர் அவர்கள்.
நடராஜனின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காகக் கடந்த 20-ம் தேதி பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியே வந்தார் சசிகலா.
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உடல் அடக்கம் முடிந்த பிறகு, அன்று இரவு மட்டும் அமைதியாக இருந்தார். ஆனால் அடுத்த நாள் காலை முதலே பஞ்சாயத்துகள் களைகட்டத் தொடங்கிவிட்டன.
நடராஜன் வாங்கிப் போட்ட சொத்துக்கள், அவைகளை முறைப்படி மாற்றவது உள்பட சொத்து விவகாரம் குறித்து தீவிர விவாதம் நடந்து வருகிறது.
மறுபுறம், ஆறுதல் சொல்ல வருகிறவர்களிடம் சோகமான முகத்தோடு பேசி வருகிறார் சசிகலா. தமிழ் ஆர்வலர்களின் வருகைதான் அதிகமாக இருக்கின்றன. ‘அண்ணனைப் போல ஒரு போராளியைப் பார்க்க முடியாது.
தமிழ்த் தேசியத்துக்காக அவர் செய்த பணிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அந்த இடத்தை யாராலும் நிரப்ப முடியாது’ எனக் கூறும் வார்த்தைகளையெல்லாம் ஆமோதித்துக் கேட்டுக் கொள்கிறார்.
அதேநேரம், தனிக்கட்சியின் விளைவுளைப் பற்றியும் திவாகரன் உள்ளிட்ட குடும்ப உறவுகள் பேசி வருகின்றனர். சசிகலாவின் மௌனம்தான் திவாகரன் உள்ளிட்டவர்களின் கோபத்துக்குக் காரணமாகிவிட்டது.
தினகரன் மீது புகார் பட்டியல்
‘டெல்லியே நம்முடைய பேச்சைக் கேட்கத் தயாராக இருக்கிறது. அதற்கான முயற்சிகளை எடுக்காமல், ‘மோடியை எதிர்த்தால் வெற்றி பெறுவோம்’ எனப் பேசுவதெல்லாம் சரியல்ல.
உங்களிடம் ஒன்றைப் பேசிவிட்டு, வெளியில் வேறு மாதிரி நடந்து கொள்கிறார் தினகரன். யாருடைய ஆலோசனைகளையும் அவர் கேட்பதில்லை.
அவர் நினைத்ததைச் செய்கிறார். இத்தனை காலமாக பாடுபட்ட எங்களையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டுச் செயல்படுவது நல்லதல்ல.
அதிகாரம் மீண்டும் கைக்கு வரும்
தனிக்கட்சி குறித்து தினகரன் யாரிடம் விவாதித்தார்? அவருடைய முயற்சியால் ஒட்டிக் கொண்டிருப்பவர்களும் வெட்டிவிட முடிவு செய்துவிட்டார்கள். உறுதியான நிலைப்பாட்டை எடுங்கள்’ எனப் பேசியுள்ளனர்.
இதனை சசிகலாவும் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து தன்னை சந்திக்க வருபவர்களிடம், ‘ நம்மிடம் கும்பிடு போட்டுவிட்டு பதவியில் உட்கார்ந்தவர்கள் எல்லாம் நமக்கு எதிராகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் எத்தனை நாட்கள் பேசப் போகிறார்கள் என்று பார்க்கிறேன். நான் நினைத்தால் ஒரேநாளில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும். அங்கிருக்கும் பலரும் உள்ளுக்குள் புழுங்கியபடிதான் இருக்கிறார்கள்.
பரோல் முடிவதற்குள் நான் யார் என்பதைக் காட்டாமல் விடமாட்டேன். என் கையைவிட்டுப் போன அதிகாரம், என் கைக்கே மீண்டும் வரும். அதனை நீங்கள் எல்லாம் பார்க்கத்தான் போகிறீர்கள்’ என முகத்தை உக்கிரமாக வைத்துக் கொண்டு பேசியிருக்கிறார்.
குடும்பத்தினருக்கு சசி போட்ட உத்தரவு
இதற்குக் காரணம், நடராஜன் மரணம் குறித்து அ.தி.மு.க தரப்பில் சிலர் பேசியதுதான் காரணம். கூடவே, குடும்ப உறுப்பினர்களின் அழுத்தமும் ஒன்று சேர்ந்துவிட்டது.
இதையடுத்து, தினகரனுக்கும் குடும்ப ஆட்களுக்கும் சில உத்தரவுகளைப் போட்டிருக்கிறார். ‘ பரோல் முடிவதற்குள் அ.தி.மு.கவில் இருந்து கணிசமான எம்.எல்.ஏக்கள் தன்னை வந்து பார்ப்பார்கள்’ என நம்புகிறாராம் சசிகலா. இளவரசியின் வாரிசுகள் மீதுதான் திவாகரன் உள்ளிட்ட சிலர் கடும் கோபத்தில் உள்ளனர்.
திவாகரன் கோபம்
இவர்களை விலக்கிவைக்காமல், அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை அவர்கள் ரசிக்கவில்லை. தனிக்கட்சி தொடக்கவிழாவில் விவேக்கின் ஆதிக்கத்தைப் பார்த்த பிறகுதான், திவாகரன் தரப்பினரின் கோபம் அதிகமானது.
இதன் எதிரொலியாகத்தான் ஜெயானந்த், தனிக்கட்சி நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. ‘யார் எதிரி? யார் நண்பன் என்பதைக் கூட தினகரன் உணரவில்லை.
இதேநிலை நீடித்தால், நாங்கள் வேறு மாதிரியான முடிவுகளை எடுக்க நேரிடும்’ என சசிகலாவிடம் திவாகரன் கோபத்தை வெளிப்படுத்தியதாகவும் சொல்கின்றனர் தஞ்சையில் உள்ள சசிகலா ஆதரவாளர்கள்.