இலங்கையின் மத்தியமாகாணம் நுவரெலியா மாவட்டத்தில் கிடைத்தற்கரிய பழம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
நுவரெலியா ஹாவாலிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களாலேயே இந்தப் பழம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகத்து மக்களால் அதிக மருத்துவ தேவையுடைய பழமாகக் கருதப்படும் பெப்பினோ மெலன் (Pepino melon) என்ற பழமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹெட்டி ஆராச்சி மற்றும் ஜயந்த பெரேரா ஆகிய இளைஞர்களால் இந்தப் பழம்குறித்து இணையதளங்களில் தேடல் மேற்கொண்டு இது பெப்பினோ பழம் என்றும் அதற்கு சர்வதேச அளவில் அதிக கேள்வி இருக்கின்றது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெப்பினோ பழமானது, பார்ப்பதற்கு தர்ப்பூசணி பழத்தைப் போல் மேலே கோடுகளோடு, மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும். கொலம்பியா, ஈக்வடார், பொலிவியா, பெரு மற்றும் சிலி போன்ற நாடுகளில் இந்தப் பழம் பொதுவாகக் காணப்படுகிறது.
ஆனால் ஏனைய வெளிநாடுகளில் இது குறைவாகவே உள்ளது. நியூசிலாந்து, துருக்கி, மொரிஷியஸ், மற்றும் சிலி ஆகிய நாடுகளில் இந்தப் பழங்களை உற்பத்தி செய்யவும் வர்த்தக நோக்கில் ஏற்றுமதி செய்யவும் பெரும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இனிப்பு சுவையுடைய பெப்பினோ மெலன் பழத்தில் விட்டமின் A, C, K, B மற்றும் புரதச்சத்துகள் என்பன நிறைந்து காணப்படுகின்றன.
இந்தப் பழத்திலுள்ள இரும்பு, செம்பு மற்றும் தாதுப்பொருட்கள் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பிற்கு உதவுபவை. அதேபோல் கல்சியம் எலும்பு உறுதிக்கும், பொட்டாசியம் ரத்த அழுத்தம் குறைவுக்கும் பயன்படுகின்றன.
மேலும் , இதிலுள்ள டையூரிடிக் அமிலம் சிறுநீரகத்தைப் பாதுகாக்கிறது. கல்லீரல் மற்றும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைய வெளிநாடுகளில் இந்த பழத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
இவாறான அதிகப் பெறுமதி வாய்ந்ததாக காணப்படுவதால்தான் இந்தப் பழத்துக்கு வெளி நாடுகளில் Super Fruits என்றும் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில், பெப்பினோ மெலன் கண்டுபிடிக்கப்பட்டமையானது மிகப்பெரும் வரப்பிரசாதமான விடயம் சென்று சொல்லப்படுகின்றது.
சர்வதேச ரீதியில் வர்த்தக ஏற்றுமதிப் பழமாக இது இருப்பதனால் இலங்கையில் இந்தப் பழங்களுக்கான கேள்வி அதிகமாகும் எனவும் நம்பப்படுகின்றது.