சசிகலா புஷ்பாவை திருமணம் செய்ய ராமசாமிக்கு நீதிமன்றம் தடை!

சசிகலா புஷ்பாவை திருமணம் செய்யவிருந்த ராமசாமி, அவரது முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு, அடுத்த திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மதுரை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அ.தி.மு.கவின் மாநிலங்களவை எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் என்று தகவல்கள் பரவின. ஊடகங்களிலும் செய்திகள் வெளியாயின. இதற்கு எதிராக ராமசாமியின் மனைவி சத்யபிரியா, மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், ‘தனக்கும், ராமசாமிக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ராமசாமி, அவரது வேலைக் குறித்து தவறான தகவல்களைக் கூறி திருமணம் செய்துகொண்டுள்ளார். அவருக்கும் எனக்கும் 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர், என்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். தற்போது, எனக்குத் தெரியாமல் இன்னொரு திருமணம் செய்துகொள்ளவுள்ளார். அதனைத் தடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ராமசாமி தாக்கல் செய்த மனுவில், ‘சத்யபிரியாவுக்கு 2012-ம் ஆண்டு பழனிசாமி என்பவருடன் ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ளது. அவர் அதனை மறைத்துள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சத்யபிரியாவுக்கும், பழனிசாமிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. மேலும், சத்யபிரியா மற்றும் ராமசாமிக்கும் இடையையேயான திருமணம் அங்கீகரிக்கப்பட்ட திருமணம். ராமசாமி, வேறொரு திருமணம் செய்துகொள்ள விரும்பினால், நீதிமன்றத்தின் முன் சத்யபிரியாவை முறைப்படி விவாகரத்து செய்துவிட்டு வேறொரு திருமணம் செய்துகொள்ளலாம்” என்று ஆணை பிறப்பித்துள்ளது.