பேருந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!

வவுனியா – புதுக்குளத்தில் வீடு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த பாடசாலை மாணவியை நேற்று 33 வயதுடைய நபரொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தரம் 9இல் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவியொருவர் நேற்றைய தினம் மேலதிக வகுப்பிற்காக சீருடையுடன் பாடசாலைக்கு சென்றுள்ளார். மதியம் பாடசாலை நிறைவடைந்து வீடு செல்வதற்காக பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்துள்ளார்.

பேருந்து தரிப்பிடத்திற்கு அருகேயுள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் 33 வயதுடைய நபரொருவர் அந்த பாடசாலை மாணவியை வர்த்தக நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

மாணவி வர்த்த நிலையத்திற்கு சென்ற சமயத்தில், அவர் மாணவியுடன் பாலியல் ரீதியான சேட்டையில் ஈடுபட்டுள்ளார். அவரிடமிருந்து தப்பித்துச் சென்ற மாணவி வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தாயார் மாணவியை அழைத்து கொண்டு ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளார்.

முறைப்பாட்டினை பெற்றுக் கொண்ட ஈச்சங்குளம் பொலிஸார் துரிதமாக செயற்பட்டு குறித்த நபரை கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபரான குறித்த 33 வயதுடைய நபரை வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.