விடுதலைப் புலிகளுக்கும், அரசாங்கத் திற்கமிடையே பேச்சுவார்த் தைகளை ஆரம்பிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்ட பின்னணியில் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் 2004ம் ஆண்டு அக்டோபர் மாத பின் பகுதியில் அமெரிக்கா சென்றார்.
இச் சந்திப்பின் பின்னர் விடுக்கப்பட்ட அறிக்கையில் புலிகள் வன்முறையை முற்றாக கைவிடவேண்டுமெனவும், ஒஸ்லோ பிரகடன அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டுமெனவும் கோரப்பட்டது.
இக் காலப் பகுதியில் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் சுவிற்சலாந்தில் இருந்த வேளை அதே மாதிரியான வேண்டுகோளை சுவிற்சலாந்து வெளியுறவு அமைச்சரும் தமிழ்ச்செல்வனை நோக்கி விடுத்திருந்தார்.
ஓஸ்லோ பிரகடனம் அவ் வேளையில் சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தது என்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
அரச தரப்பும் இதே விதத்தில் பேசத் தொடங்கியிருந்தது. குறிப்பாக அரசினால் முன்வைக்கப்பட்ட சமாதானத்திற்கும், நல்லிணக்கத்திற்குமான ஆலோசனைச் சபை என்பது இறுதித் தீர்வை நோக்கிய இடைக்கால ஏற்பாடு எனவும், இறுதித் தீர்வு ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டித் தீர்வு எனவும் கூறியது.
ஒரு வாரத்தின் பின்னர் ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு ஒஸ்லோ திரும்பிய புலிகள் குழு நோர்வே வெளியுறவு அமைச்சர், எரிக் சோல்கெய்ம் ஆகியோரைச் சந்தித்தது.
அப்போது தாம் பிரபாகரனைச் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேலும் முன்னெடுப்பதற்கான வழிவகைகளை ஆராய விரும்புவதாக தெரிவித்தார்.
அத்துடன் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் புலிகள் அமைப்பு தமது நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையிலும் புலிகளைப் பங்காளியாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இச் சமாதான முயற்சிகளுக்கு தமது ஆதரவு உண்டு எனத் தெரிவித்ததாக கூறினார்.
நோர்வே வெளிநாட்டமைச்சர் நவம்பர் மாத நடுப்பகுதியில் பிரபாகரனை கிளிநொச்சியில் சந்தித்தார்.
இச் சந்திப்பில் பாலசிங்கம் லண்டனிலிருந்து அங்கு சென்று கலந்துகொண்டார். பேச்சுவார்த்தைகளில் பெரும் நெகிழ்ச்சியை சந்திரிகா காட்டியுள்ளதாக நோர்வே அமைச்சர் அங்கு விளக்கினார்.
ஆனாலும் குறிப்பிடத்தக்க செய்தி எதையும் அவரால் எடுத்தச் செல்ல முடியவில்லை. தென் பகுதியிலிருந்து இடைக்கால தன்னாட்சி அதிகார சபை யோசனைகளுக்கான ஒட்டுமொத்த நல்லெண்ணத்தை தான் எதிர்பார்ப்பதாக பிரபாகரன் தெரிவித்தார்.
இச் சந்திப்பினைத் தொடர்ந்து இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது 2002 இல் ஒஸ்லோ பிரகடனம் என ஒன்று ஏற்பட்டதாக கூறுவதை பாலசிங்கம் நிராகரித்தார்.
பல சுற்று பேச்சுவார்த்தைகளின் போது அவ்வப்போது வெளியிடப்பட்ட அறிக்கைகளைப் பின்புலமாகக் கொண்டு அனுசரணையாளர்களால் அவ்வாறு கூறப்பட்டது என விளக்கம் அளித்தார்.
அவ்வப்போது வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் சமஷ்டி அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வுக்கான வாய்ப்புகளைக் கண்டறிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எனவே அது புலிகளால் ஏற்கப்பட்ட பிரகடனம் அல்ல எனத் தெரிவித்த பிரபாகரன் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகளின் ஒவ்வொரு சொல்லையும் தாம் வற்புறுத்தப்போவதில்லை, தேவைப்படின் மாற்றங்களை ஏற்படுத்த தாம் தயார் எனத் தெரிவித்திருந்தார்.
அத்துடன் அரசில் இணைந்துள்ள சகல தரப்பினரும் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பகிரங்க அறிக்கை ஒன்றினை வெளியிட ஏற்பாடு செய்யவேண்டுமெனக் கோரினார்.
இவை தொடர்பாக சந்திரிகா, அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் ஆர்மிற்றேஜ் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட போது நோர்வே தரப்பினர் தான் நெகிழ்வாக நடந்துகொள்ளவில்லை என அழுத்தம் தருவதாகவும் அதே அளவு அழுத்தத்தை புலிகளுக்குப் போடவில்லை எனவும் முறையிட்டார்.
தற்போது நவம்பர் மாத இறுதிப் பகுதி என்பதால் மாவீரர் தின உரை பற்றிய எதிர்பார்ப்புகள் மீண்டும் ஆரம்பமாகின.
நாட்டின் தேசிய இனப் பிரச்சனையில் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படைப் பிரச்சனைகள் குறித்து அரசின் உத்தியோகபூர்வ கொள்கைகள் என்ன? என்பதை அரசு வெளியிடவேண்டும் என அவ் உரையில் கோரியதோடு தம்மால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன்மொழிவுகள் குறித்து தாமதிக்காமல் நிபந்தனை அற்ற பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டுமெனவும் தெரிவித்த அவர் ஜே வி பி இனை இனவாத, மத அடிப்படைவாத, மாக்ஸிச அடிப்படைவாத கட்சி என விமர்ச்சித்தார்.
2004ம் ஆண்டுத் தேர்தல் சிங்கள பௌத்த மதவாத சக்திகளுக்கு வழிகளைத் திறந்து விட்டுள்ளதாகவும்,ஜனாதிபதி இனவாத சக்திகளுடன் கைகோர்த்துள்ளார் எனவும், தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வு குறித்து ஒன்றிற்கு ஒன்று முரணான கொள்கைகளைக் கொண்டுள்ள கட்சிகள் அரசில் கூட்டுச் சேர்ந்துள்ளதாகவும் விமர்ச்சித்தார்.
பிரபாகரனின் இந்த உரை அரசிற்கு மறைமுகமான எச்சரிக்கையாக அமைந்துள்ளது என அரச தரப்பில் உணரப்பட்டது.
நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு எச்சரிக்கும் மொழிப் பிரயோகத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாவும், நல்லெண்ணத்துடன் ஆரம்பித்துள்ள இப் பேச்சுவார்த்தைகள் நிபந்தனை அற்றதாக அமைவது அவசியம் என அரச தரப்பில் கூறப்பட்டது.
இரு தரப்பாருக்குமிடையே காணப்படும் இழுபறி நிலமைகள், ஜே வி பி இன் சமாதான முயறிசிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள், நோர்வே இற்கு எதிரான ஆரப்பாட்டங்கள் என்பன நோர்வே தரப்பினருக்கு கவலை தரும் விடயங்களாக மாறின.
இவை தொடர்பாக அமெரிக் தூதுவர் தெரிவிக்கையில் தனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக ஜனாதிபதியின் கவனம் செல்வதால் பேச்சுவார்த்தைகளிற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியவில்லை எனத் தான் கருதுவதாக தெரிவித்தார்.
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை நடத்திய பின் 2004ம் ஆண்டு டிசம்பர் மாத பிற்பகுதியில் கிளிநோச்சி சென்ற சோல்கெய்ம் அங்கு பேச்சுவார்த்தைகளை விட வேறு விடயங்களில் அவர்களின் கவனம் சென்றிருப்பதை அவதானித்தார். தாம் பேச்சுவார்த்தைகளுக்குத் தடையாக உள்ள அம்சங்களில் கவனம் செலுத்தி வருவதாக தமிழ்ச்செல்வன் விளக்கியிருந்தார்.
இவை யாவற்றையும் ஆராய்ந்த சொல்கெய்ம் கவலையடையத் தொடங்கினார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் சமாதான முயற்சிகள் தற்போது மிகவும் கீழ் நிலைக்குச் சென்றிருப்பதை உணர்ந்தார்.
இரு தரப்பாரும் தாம் பயனுள்ள விதத்தில் அனுசரணையாளராக செயற்படுவதாக உணரும் வரை அதில் ஈடுபடுவதாக தெரிவித்தார்.
இச் சந்தர்ப்பத்தில் அரச தரப்பின் தனபால அவர்கள் இடைக்கால ஏற்பாடாக புதிய முன்மொழிவுகளை சோல்கெய்மிடம் கையளித்தார். அதனைப் படித்த பாலசிங்கம் தாம் புலிகளின் தலைமையுடன் பேசிய பின் பதிலளிப்பதாக தெரிவித்தார்.
இக் காலப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவும் வந்தது. இச் சந்தர்ப்பத்தில் தனபால அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட புதிய முன்மொழிவுகள் குறித்து புலிகளின் அறிக்கை வெளியாகியது.அதில் உள்ளடக்கம், நிர்மாணம் எனபவை குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டனர்.
இவை குறித்து இதுவரை மௌனமாக இருந்து வந்த கூட்டமைப்பின் தலைமை தற்போது இரு தரப்பாரும் மூலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்தது.
புலிகளின் இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை முன் மொழிவுகளை அரசாங்கம் நிராகரித்ததும், அதனைத் தொடர்ந்து ஜே வி பி அரசில் இணைந்து கொண்டதும் சமாதான முயற்சிகளுக்குத் தடையாக அமைந்ததாக இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவித்தார்.
புலிகள் தரப்பினர் கருணாவின் பிரச்சனையை அரசியல் ரீதியாக ஓரம் கட்டியதும், இணக்கத்தைக் காண்பதைக் கைவிட்டு தாக்குதலைத் தொடுத்ததும், இக் காலத்தில் புலிகளின் போக்கு கடுமை அடைந்திருப்பதும் 30 மாத கால விளைபொருளாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மூன்று வருடகால போர் நிறுத்த ஒப்பந்தம் மக்களின் வாழ்க்கையில் அல்லது சமாதான முயற்சிகளில் எந்தவித மாற்றங்களையும் தராத நிலையில் அவலங்கள் தொடர்ந்தன.
இப் பின்னணியில் எண்ணெய்ச் சட்டிக்குள் வெந்துகொண்டிருந்த மக்கள் நெருப்பிற்குள் விழுந்தது போல சுனாமி என்ற இயற்கை அரக்கன் அம் மக்களை மீண்டும் கொடுமைக்குள் தள்ளியது.
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி காலை 9.30 மணிக்கு இவ் அவலம் அரங்கேறியது. முல்லைத்தீவின் கரையோரத்தில் ஆரம்பித்து கொழும்பை அண்டிய அதாவது கடற்கரை ஒரத்தில் அமைந்திருந்த புகையிரதப்பாதை ஈறாக கொடுமை தாண்டவமாடியது.
கொழும்பு – காலி புகையிரதப் பாதை கடல் அலையால் தாக்கப்பட்டது. புகையிரதத்தின் எட்டுப் பெட்டிகள், அருகிலிருந்த கட்டிடங்கள், மரங்கள் அழிந்தன. சுமார் 2000 மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
நாடு முழுவதிலும் சுமார் 35,000 இலிருந்து 39,000 மக்கள் மடிந்தார்கள். 5 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.
இவ் இயற்கை அனர்த்தம் சகல மக்களையும் வேறுபாடுகளுக்கு அப்பால் இணைத்திருந்தது. மனித உணர்வு வெளிப்பட்டது.
இக் கொடுமைகள் நிகழ்ந்த நான்கு நாட்களுக்குள்ளாகவே அரசு மக்களுக்கான உதவிகளை வழங்கும் பொருட்டு விசேட குழுவொன்றை அமைத்து அதில் விடுதலைப்புலிகளையும் இணைந்து கொள்ளுமாறு கோரியது.
இவ் அழைப்பும் வீணாகியது.
சுனாமி அனர்த்தங்களை நேரில் பார்க்கும் பொருட்டு அம்போதைய ஐ நா சபைச் செயலாளர் கோபி அனன் அவர்கள் 2005ம் ஆண்டு ஜனவரி மத்தியில் இலங்கை வந்தார்.
அவர் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தினை பார்வையிட அரசு மறுத்தது. அரசின் இப் போக்கு புலிகள் மத்தியிலே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.
அதன் காரணமாக சகல நிவாரண உதவிகளும் தம்மால் நடத்தப்படும் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினூடாகவே வழங்கப்படவேண்டும் என அவர்களும் பதிலுக்கு வற்புறுத்தினர்.
மக்களின் துன்பத்திலும் தொடர்ந்து அரசியல் விளையாடியது. பல நாடுகள் உதவின. நோர்வேயும் தனது பங்கினைச் செலுத்தியது. இவ் உதவிகளுக்குத் தலைமை தாங்கிய அந் நாட்டின் வெளிநாட்டமைச்சர் ஜனவரி 19ம் திகதி கொழும்பு வந்தார்.
அத் தருணத்தில் சுனாமியில் விடுதலைப் புலிகளின் தலைமை இறந்து விட்டதாக செய்திகள் பரவியதால் பிரபாகரன் தலைமையில் பலர் சுனாமிக்குப் பின்னர் முதற் தடவையாக மக்கள் முன் தோன்றினர்.
நோர்வே வெளிநாட்டமைச்சர் சுனாமியால் பாதிக்கப்பட்ட வடக்கிற்கு உதவும் வழி வகைகளை பிரபாகரனுடன் பேசினார்.
அரசாங்கமும், புலிகளும் இவ் உதவித் திட்டத்தில் இணைந்து செயற்பட்டால் அது சமாதான முயற்சிகளுக்கு உதவியாக அமையும் என வற்புறுத்தினார்.
இந் நிலமைகள் குறித்து எரிக் சோல்கெய்ம் இனது அபிப்பிராயம் என்னவெனில் சுனாமியால் ஏற்பட்ட அழிவு பிரபாகரனை கவலைப்படுத்தியிருந்ததை தம்மால் அவதானிக்கக்கூடிதாக இருந்ததாகவம், ஆனால் அரசாங்கம் இந் நிலமைகளைப் பயன்படுத்தி அரசியலை நடத்துவதே நோக்கமாக காணப்பட்டது.
இருப்பினும் சந்திரிகா இப் பிரச்சனையில் தேசத்தின் உண்மையான தலைவராகவே செயற்பட்டதை கண்டதாக குறிப்பிட்டார்.
நோர்வே இன் தூதுவர் குறிப்பிடுகையில் தாம் கிளிநோச்சி சென்று தமிழர் புனர்வாழ்வுக் கழக உத்தியோகஸ்தர்களைச் சந்தித்தாகவும், மக்களின் உளவியலில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்தே அவர்களது கவலை காணப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், இது பற்றி கொழும்பில் மிகச் சிறிய அளவிலேயே பேசப்பட்டதாக குறிப்பிடுகிறார்.
பிரபாகரன் கொடுமை நிறைந்தவராக காணப்பட்ட போதிலும் மக்களையும், தனது போராளிகளையும் நேசித்தார் எனவும், மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்பதில் கரிசனை காட்டினார் எனவும், சந்திரிகாவும் அதே அளவு கரிசனை காட்டினாலும் தேசிய அளவில் கலந்து பேசவேண்டுமெனக் கருதியதாக அவர் குறிப்பிடுகிறார்.
சுனாமியின் கொடுமைகளால் சிதைந்துள்ள மக்களின் வாழ்வை மீட்டெடுப்பதில் இரு சாராரும் திறந்த மனதோடு செயற்படாதது அரசியலில் மனிதத் தன்மை செத்துவிட்டதை உணர்த்துவதாக இருந்தது.
தமது கையில் பணத்தைத் தரும்படி புலிகள் வற்புறுத்தியதும், அரசாங்கம் மறுப்பதம் கோர விளைவுகளாக அமைந்தன. இப் பின்னணியில் புலிகளின் முக்கியஸ்தர் கருணா தரப்பால் படுகொலை செய்யப்பட்டார்.
( விபரங்கள் அடுத்த வாரம்)
-சிவலிங்கம்-