கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நகைகள் பறிமுதல்!

சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமாக ஒரு கோடியே முப்பது இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை எடுத்து வந்த நபரை சுங்க அதிகாரிகள் நேற்று (23) அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 02 கிலோ மற்றும் 36 கிராம் நிறைகொண்ட தங்க நகைகள் மீட்கப்பட்டிருப்பதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மட்டக்களப்பைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கூடாக ஈ.கே 349 என்ற இலக்க எமிரேட்ஸ் விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த அவர் கிறீன் செனலுக்கூடாக வெளியே செல்ல முற்பட்டபோதே சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் அவரைக் கைது செய்தனர்.

தங்க வளையல்கள், மோதிரங்கள் மற்றும் மாலைகள் ஆகியன அவரது பயணப் பொதிக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபரின் கடவுச்சீட்டில் பொறியியலாளர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் அவர் நகை வியாபாரம் செய்பவர் என தெரியவந்திருப்பதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகைகளை பறிமுதல் செய்துள்ள சுங்க அதிகாரிகள் சந்தேக நபரைத் தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தி வருகின்றனர்