தமிழகத்தில் அக்காள் கண்முன்னே தங்கை பலியானதால், அவர் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொளத்தூர் அஞ்சுகம் பகுதியைச் சேர்ந்தவர் சியாம்குமார். சொந்தமாக தொழில் செய்து வரும் இவருக்கு பிரமிளா என்ற மனைவியும், ஜெயஸ்ரீ(22) மற்றும் ஜானவி(16) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள ஜானவி நேற்று மதியம் தனது அக்காளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஜானவி பின் பக்கம் உட்கார, ஜெயஸ்ரீ வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
புளியந்தோப்பு ஸ்டீபன்சன் சாலையில் இவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக லாரி ஒன்று அவர்களை கடக்க முற்பட்டுள்ளது.
அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், ஜெயஸ்ரீயும், ஜானவியும் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியதால், அவர்கள் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து, லாரியின் அடியில் சிக்கினர்.
அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் ஜானவி மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜெயஸ்ரீ காயங்களுடன் தப்பினார். தன் கண் முன்னே தங்கை ஜானவி பலியானதைக் கண்டு, அக்காள் ஜெயஸ்ரீ கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜெயஸ்ரீயும், ஜானவியும் கீழே விழ காரணமாக மோடார் சைக்கிள் ஓட்டிச் சென்றவர் யார் எனத் தெரியவில்லை எனவும், லாரியின் ஓட்டுனரும் தப்பி ஓடிவிட்டதால் பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.