யாழ் மாநகரசபை மேயர் யார் என்ற உச்சக்கட்ட பரபரப்பு நிலவும் நிலையில், கிங்மேக்கராக உருவெடுத்துள்ள ஈ.பி.டி.பி கட்சி முடிவொன்றிற்கு வந்துள்ளது.
இன்று மாலை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கும், ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நடந்த தொலைபேசி பேச்சுவார்த்தையில், ஆர்னோல்ட்டை ஆதரிக்க ஈ.பி.டி.பி இணக்கம் தெரிவித்துள்ளது.
ஆனோல்ட் முதல்வராவதில் ஈ.பி.டி.பிக்குள் எதிர்ப்புக்கள் இருந்தாலும், அந்த எதிர்ப்புக்களை மீறி ஆனோல்ட்டை ஆதரிப்பதென டக்ளஸ் தேவானந்தா முடிவெடுத்துள்ளார்.
நேற்று இரவு ஈ.பி.டி.பியின் சார்பில் மாநகரசபைக்கு தேர்வானவர்களை சிறிதர் தியேட்டரிற்கு அழைத்த டக்ளஸ் தேவானந்தா, கலந்துரையாடல் நடத்தினார். இதன்போதுது இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
இதையடுத்து, “நாளை காலை எட்டுமணிக்கு சிறிதர் தியேட்டரிற்கு வாருங்கள், எனது முடிவை அறிவிக்கிறேன். அதன்படி நடவுங்கள்“ என டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார்.
மாநகரசகை மேயர் விவகாரத்தில் இணக்கப்பாடு எட்டப்படாததையடுத்து, இன்று காலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தொலைபேசியில் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டார்.
எனினும், உடல்நலமின்மையால் ஓய்வில் இருந்த டக்ளஸ் தேவானந்தா, அந்த அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை. இதையடுத்து, இன்று மாலை மீண்டும் மாவை தொடர்புகொள்ள, டக்ளஸ் பதிலளித்தார்.
இதன்போது, ஆனோல்ட்டை ஆதரிக்க வேண்டும் என்றும், மணிவண்ணன் மேயரானால் தமிழ் சமூகத்திற்கு நல்லதல்ல என்றும் மாவை கூறினார். அவரது கருத்துக்களை டக்ளஸ் ஏற்றுக்கொண்டார்.
“இன்று தொலைபேசியில் தொடர்பு கொள்வதைவிட, தேர்தல் முடிவு வந்ததும் தொடர்புகொண்டிருந்தால் இவ்வளவு சிக்கல்கள் வந்திருக்காதே“ என டக்ளஸ் தெரிவித்தார்.
தமது கட்சியின் சார்பில் வேறும் சிலர் பேச்சு நடத்திக் கொண்டிருந்ததால் தான் தொடர்பு கொள்ளவில்லையென மாவை சேனாதிராசா குறிப்பிட்டார்.
மாவையின் கோரிக்கைக்கு டக்ளஸ் பதிலளிக்கும்போது- ஆனோல்ட் வர வேண்டும் என்றோ, வரக்கூடாதென்றே தனக்கு தனிப்பட்ட எந்த அபிப்பிராயமும் இல்லை. கட்சிக்குள் சில எதிர்ப்பு உள்ளது அதை சமாளித்தால், ஆதரவளிக்கலாம்.
ஆனோல்ட் வந்தால் ஈ.பி.டி.பிக்கு போட்டி அதிகமாக இருக்குமென எங்கள் கட்சிக்குள் அபிப்பிராயம் உள்ளது.
ஆனால், பிரபாகரனான பிரபாகரனுடனேயே எதிர்த்து நின்ற எனக்கு, ஆனோல்ட் எல்லாம் ஒரு பொருட்படுத்தத்தக்க விசயமா?“ என்று கூறினார்.
இந்த சந்திப்பின்போது, ஆனோல்ட்டை ஆதரிப்போமென டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.
இதேவேளை, தமிழ் பக்கத்திற்கு கிடைத்த தகவல்களின்படி, ஆனோல்ட்டை தீவிரமாக எதிர்க்கும் ரெமீடியசுடன் பேசி, அவரை சமரசம் செய்யும் பணியை தனக்கு நெருக்கமான ஒருவரிடம் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளார்.
இதையெல்லாம் கூட்டி, கழித்து பார்த்தால்- நாளைய தினம் ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் ஆனோல்ட் மேயராகலாமென்றுதான் தெரிகிறது.
இதனை அடுத்து விரைவில் பிள்ளையான் – கருணாவையும் கூட்டமைப்பு கட்சியில் இணையலாம் எனக் கூறும் அரசியல் அவதானிகள், அரசியலுக்காக மிக அடிமட்ட அரசியலில் கூட்டமைப்பு இறங்கிய முதல் சந்தர்ப்பம் இது என கூறப்படுகிறது.