அரசியல் கட்சியாகிறது மகாசோன் படையணி!

அண்மையில் கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டி விட்ட சிங்களக் கடும்போக்குவாத அமைப்பான, மகாசோன் படையணி, அரசியல் கட்சியாக மாறவுள்ளது.

தமது கட்சியைப் பதிவு செய்வதற்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் கையளித்திருப்பதாக,  மகாசோன் படையணியின் பேச்சாளர் ஒருவர் அனுராதபுரத்தில் தெரிவித்தார்.

”எல்லா இனங்களுக்கும் அரசியல் கட்சிகள் உள்ளன. ஆனால் சிங்களவர்களுக்கு என்று எந்த அரசியல் கட்சிகளும் இல்லை.

எனவே, சிங்களவர்களுக்கான புதிய அரசியல் கட்சியை, மகாசோன் படையணி மற்றும் ஏனைய சில அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கவுள்ளோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கண்டி மற்றும் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை மகாசோன் படையணியே சமூக ஊடகங்களின் ஊடாகவும், நேரடியாகவும் தூண்டி விட்டிருந்தது.

இதற்காக, மகாசோன் படையணியின் தலைவர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.