உக்ரைனைச் சேர்ந்த ஆல்கா கமனெட்ஸ்கயா அழகான பொம்மைகளைச் செய்து உலகத்தின் பார்வையைத் தம் பக்கம் திருப்பி யிருக்கிறார். விலை மலிவான பொம்மைகளை வாங்கி, அதைத் தன் கற்பனைத் திறனாலும் கலைத்திறனாலும் முற்றிலும் வேறு ஒரு பொம்மையாக உருவாக்கி விடுகிறார். இந்தப் பொம்மைகள் நிஜ மனிதர்களைப்போல் அத்தனை நேர்த்தியாக இருக்கின்றன! சின்ன வயதில் பொம்மைகளுடன் பொழுதைக் கழித்தவர், வளர்ந்த பிறகு அதை மறந்து போனார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு மான்ஸ்டர் ஹை பொம்மைகளைப் பார்த்தார். உடனே சிலவற்றை வாங்கி வீட்டில் வைத்தார். அப்போது இணையதளத்தில் ஏற்கெனவே இருக்கும் பொம்மையை வேறு ஒரு பொம்மையாக மாற்றும் கலைஞர்களைப் பற்றிப் படித்தார். ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து பொம்மைகளை மறு உருவாக்கம் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டார்.
2013-ம் ஆண்டு முதல் பொம்மையை மறு உருவாக்கம் செய்தார். அது மிக அழகாகத் தோன்றியது. ஆனால் மற்றவர் பார்வையில் அப்படி இல்லை. தொடர்ந்து 3 மாதங்கள் பயிற்சி செய்து, மிகப் பிரமாதமான பொம்மையை உருவாக்கிவிட்டார். அன்று ஆரம்பித்த பொம்மை விற்பனை இன்றளவும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுவருகிறது. “என்னுடைய பொம்மைகள் பிரபலமான பிறகு எனக்கு ஓய்வே இல்லாமல் போய்விட்டது. சில நேரங்களில் ஆர்டர்களைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு வேலைகள் குவிந்துவிடும். சாதாரண பொம்மைகளில் இருந்து பிரபலமானவர்களின் உருவங்களைக் கூட உருவாக்கிவிடுகிறேன்” என்கிறார் ஆல்கா.