மீண்டும் சவுதி அரேபியாவை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்!

யேமன் நாட்டில் இருந்து சவுதி அரேபியாவை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஞாயிறு நள்ளிரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் சவுதி அரேபியர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்து பலர் இதை பதிவு செய்துள்ளனர். பெரும் சத்தத்துடன் அதிக ஒளி வெட்டத்துடனும் சீறி வந்த ஏவுகணையை சவுதி ராணுவம் இடைமறித்து அழித்துள்ளனர்.

யேமனில் உள்ள ஹூதி போராளிகளே குறித்த ஏவுகணையை வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரியாத்தில் அமைந்துள்ள முக்கிய விமான நிலையத்தை குறிவைத்தே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மட்டுமின்றி, தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை எதிர்பார்க்கலாம் எனவும் ஹூதி போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யேமனில் சவுதி கூட்டுப்படைகளின் நடவடிக்கைகள் தொடங்கி இது 3-வது ஆண்டு என்பதை குறிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

யேமனில் கடந்த 2015 மார்ச் மாதம் துவங்கிய சவுதி கூட்டுப்படைகளின் ராணுவ நடவடிக்கைகளால் இதுவரை 10,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.