பரபரப்பான அரசியல் சூழலில் யாழ்ப்பாண மாநகரசபையின் முதலாவது அமர்வு இன்று திங்கட்கிழமை(26) காலை-09 மணி முதல் மாநகர சபையின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.கடந்த பெப்ரவரி- 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாண மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் முதலாவது அமர்வே இன்று கூடவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் முதலாவதாக, மாநகர முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. மொத்தமாக 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகரசபையில் தனித்து ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 23 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எவ்வாறாயினும், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால்,மாநகர முதல்வர் தெரிவில் பலத்த எதிர்பார்ப்புத் தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிந்திய இணைப்பு:
உள்ளூராட்சி தேர்தலின் பின்பான யாழ். மாநகரசபையின் முதலாவது கூட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இன்று யாழ். மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு இடம்பெறவுள்ள நிலையில் உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் தெரிவாகியுள்ள உறுப்பினர்கள் கூட்டத்திற்கு சமூகமளித்துள்ளனர்.இரகசிய வாக்கெடுப்பின் மூலம் யாழ். மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயர் தெரிவு இடம்பெறவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் யாழ். மேயர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக இ.ஆர்னோல்ட் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.