இலங்கை அரசாங்கத்தினால் தேடப்படும் முக்கிய பாதாள உலக தலைவரான மாகந்துரே மதூஷ் சுவிட்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டுபாயில் இருக்கும் அவர், அரசியல் புகலிட கோரிக்கை தொடர்பில், தேவையான ஆவணங்களை தயார் செய்து உரிய தரப்பினருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் சிறப்பு புலனாய்வுத் துறை விசாரணை தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சகோதரன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதாகவும், இலங்கை பொலிஸார் தன்னையும் கொலை செய்ய முயற்சிக்கும் போதே தான் நாட்டை விட்டு தப்பி வந்ததாக கூறியே மாகந்துரே மதூஷ் புகலிட கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தனக்கு எதிராக சுமத்தும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் புனையப்பட்டவை என சுட்டிக்காட்டியுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இலங்கையில் இடம்பெற்ற பல கொலைகள் தொடர்பில் மாகந்துரே மதூஷ் பின்னணியில் இருப்பதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், அவரைக் கைதுசெய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாகந்துரே மதூஷ் டுபாயிலிருந்து இத்தாலிக்கு தப்பிச்சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் ஊடாக மதூஷ் இத்தாலியில் இருப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் மாகந்துரே மதூஷை கைதுசெய்ய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரும், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் இணைந்து பாரிய முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.