ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை: பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு பொருளாதார தடை!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்து ஏழு பாகிஸ்தான் நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

அமெரிக்காவின் ஏற்றுமதி நிர்வாக கட்டுப்பாட்டு அமைப்புடன் (இ.ஏ.ஆர்) இணைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் ஏற்றுமதி செயல்பாடுகளை அமெரிக்க வர்த்தக துறை ஆய்வு செய்தது.

இதில், 7 பாகிஸ்தான் நிறுவனங்கள் உட்பட 23 நிறுவனங்களின் செயல்பாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்பு அல்லது வெளியுறவு கொள்கைக்கு முரணாக உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

ஏற்கனவே, தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்க வழங்கி வந்த சிறப்பு நிதியை சமீபத்தில் நிறுத்தியது. மேலும் கண்காணிக்கப்படும் நாடுகள் பட்டியலிலும் பாகிஸ்தானை சேர்த்தது.

இதைத் தொடர்ந்து தற்போது அணு ஆயுத பரவல் குற்றச்சாட்டின் கீழ், பாகிஸ்தானின் 7 நிறுவனங்களுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், என்.எஸ்.ஜி அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பினராவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்திருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.