பேஸ்புக் சமூக வலைத் தளத்தில் சிங்கள மொழியில் தனது பெயரை வைத்திருந்து இனவாதக் கருத்துக்களைப் பரப்பி வந்ததாகக் கூறப்படும் முஸ்லிம் மாணவர் ஒருவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
குறித்த நபர், பேஷ்புக் சமூக வலைத்தளம் வழியாக இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் காணப்படும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டார் என்று கடந்த வாரங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மாணவர், கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் மீதான வழக்கு இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், குறித்த சந்தேக நபர் மாணவன் என்றபடியால், அவருக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
ஆனாலும் அந்தக் கோரிக்கையை மறுத்த நீதவான், சந்தேகநபருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதென்றும் அதற்கான அதிகாரம் நீதிமன்றுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.
இதனைடடுத்து குறித்த சந்தேகநபரை எதிர்வரும் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.