கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கயைில்லா தீர்மானத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 ஆதரவளிக்க தீர்மானித்திருப்பதாக அக்கட்சியின் இராஜாங்க அமைச்சரான பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்தில் சபைக்கு சமூகமளிக்காதிருக்க அல்லது நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதராக வாக்களிப்பதற்கு குறித்த 27 பேரும் தீர்மானித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
புத்தளம் ஆனமடுவ பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பீடத்தை வகித்த தலைவர்கள் எவரும் இதற்கு முன்னர் இவ்வாறான அவமானத்தை அடைந்திருக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
கட்சி எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள், நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு கட்சிக்குள் மறுசீரமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதே சிறந்த வழி என்று குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால் கட்சியின் உறுப்புரிமை அல்லது அமைச்சுப் பதவியை பறித்துவிடுவார்கள் என்று கூறினார்.
இருந்த போதிலும் அவ்வாறு நடவடிக்கை மேற்கொண்டால் அதற்கெதிராக வழக்கு தொடர்ந்து கட்சி உறுப்புரிமையையும், பதவியையும் காப்பாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.