போதைக்காக முதலாளியைத் திருடனாக்கிய ஊழியர்!

கொள்ளையர்கள்

சென்னையில் போதைக்காக முதலாளியை ஊழியர் ஒருவர் திருடனாக்கியச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பூட்டிக்கிடக்கும் வீடுகளில் அடிக்கடி நகை, பணம் கொள்ளை போனது. இதுகுறித்து பூக்கடை துணைக் கமிஷனர் செல்வக்குமார் மேற்பார்வையில் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். ஆனால், எந்தவித துப்பும் துலங்கப்படவில்லை. இந்தச் சமயத்தில் யனைக்கவுனி பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளை நடந்தது. அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்களின் முகம் தெளிவாகத் தெரிந்தது. உடனே, அவர்கள் யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது, பாரிமுனையில் மளிகைக்கடை நடத்திவரும் புந்தாராமின் கடையில் பணிபுரியும் ஊழியர் என்று தெரியவந்தது. உடனே அவர்கள் இருவரிடமும் போலீஸார் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொள்ளை

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “பாரிமுனை, யானைக்கவுனி, சவுகார்பேட்டை, பார்க்டவுன் ஆகிய பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. கொள்ளை நடந்த வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட கைரேகையை பழைய குற்றவாளிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோம். ஆனால், கைரேகைகள் ஒத்துப்போகவில்லை. இது, கொள்ளையர்களைக் கண்டறிவதில் சிக்கலை ஏற்படுத்தியது. இந்தச் சமயத்தில்தான் யானைக்கவுனியில் உள்ள பூட்டிய வீட்டில் நடந்த கொள்ளையில் கொள்ளையர்களின் முகம் சி.சி.டி.வி. கேமராவில் தெளிவாகத் தெரிந்தது. கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது, மளிகைக்கடை முதலாளி புந்தாராமின் கடை ஊழியர் நர்பந்த்லால் சிங் என்று தெரிந்தது. அவர்கள்தான் பூட்டிய வீடுகளில் தொடர்ந்து திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளைப் பறிமுதல் செய்துள்ளோம்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் புந்தாராம், நர்பந்த்லால் சிங் மேற்கு கோதாவரியைச் சேர்ந்தவர். மளிகைப் பொருள்களை டோர் டெலிவரி செய்ய நர்பந்த்லால் சிங் வீடுகளுக்குச் செல்வார். அப்போது பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிடுவார். மளிகைக் கடையில் வேலை முடிந்தபிறகு இரவில் அந்த வீட்டுக்குச் சென்று ‘ஸ்குரு டிரைவ்’ மூலம் கதவைத் திறந்து கொள்ளையடித்துள்ளார். ஸ்குரு டிரைவ் மூலம் கதவுகளைத் திறப்பதில் கைதேர்ந்தவர் நர்பந்த்லால் சிங். இதனால் அவரது கையில் ஏராளமாகப் பணம் நடமாடியுள்ளதைப் பார்த்த புந்தாராம் விவரம் கேட்டுள்ளார். அப்போது, நர்பந்த்லால் சிங், திருட்டுத்தொழில் குறித்து கூறியுள்ளார். அதோடு, போதை பொருள்களைக் கொடுத்து புந்தாராமையும் திருடனாக்கியுள்ளார். அதன்பிறகு இருவரும் இணைந்து இரவில் திருடிவந்துள்ளனர். நர்பந்த்லால் சிங் மீது சென்னை மட்டுமல்லாமல் கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான் என வடமாநிலங்களிலும் கொள்ளை வழக்குள் உள்ளன. அங்கிருந்து தலைமறைவான அவர், சென்னையிலும் போதைக்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் திருடியுள்ளார்” என்றனர்.