போராட்ட காலத்தில் ஈ.பி.டி.பி செய்த துரோகத்தனங்கள் எக்காலத்திலும் மறையாது.
ஆனால், தேர்தல் காலங்களில் ஈ.பி.டி.பி கட்சிக்கும் ஆதரவளிக்கும் மக்களை எவ்விதத்திலும் நிராகரித்துவிட முடியாது.
இன்று ஈ.பி.டி.பியுடன் சேரும் கூட்டமைப்பு துரோகிகளென்றால், ஈ.பி.டி.பிக்கு வாக்களித்த பல்லாயிரக்கணக்கான மக்களும் துரோகிகள் அல்லவா?
கூட்டமைப்புக்கு வாக்களித்த லட்சோபலட்சம் மக்களும் துரோகிகளல்லவா?
அப்படிப் பார்த்தால் நல்லவர்களைவிட துரோகிகள்தானே நம்மில் நாலில் மூன்று பக்காளிகளாக இருக்கிறோம்?
ஈ.பி.டி.பி கட்சிக்கென்று நீண்டகாலமாக ஒரு வாக்கு வங்கி இருக்கிறதே, அதை உடைப்பதற்கு நாங்கள் என்ன செய்திருக்கிறோம்?
அந்த மக்கள் ஈ.பி.டி.பியை நாடுவதற்கான காரணத்தை அறிந்து அவர்களின் குறைகளைப் போக்கியிருக்கிறோமா?
நான் அதிகம் அறிந்தவரை விடுதலைப் புலிகள்மீது பற்றுவைத்த எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் தேர்தல் என்று வருகின்றபோது டக்ளஸ் தேவானந்தாவுக்கே வாக்களிக்கிறார்கள்.
ஏன்? டக்ளஸ் செய்த உதவிகளைவிட அவரது கட்சியினர் செய்த துரோகத்தனங்கள் அடித்தட்டு மக்கள்வரை வெகுவாகக் கொண்டு சேர்க்கவில்லை, தவிர, கூட்டமைப்போ முன்னணியோ அடித்தட்டு மக்கள்வரை இறங்கி வேலை செய்யவில்லை.
அந்த மக்களுக்கு உடனடியாக தேவைப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் கடந்தகால எதிர்ப்பரசியலால் இல்லாமலே போனது.
இந்த இடைவெளியை அரசாங்கத்தோடு அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார்.
நாங்கள் அந்தக் காலத்தில் அரசாங்கத்திடம் கை ஏந்தவேண்டிய தேவை இல்லை.
புலம்பெயர்ந்த உறவுகளை வைத்தே அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பியிருக்க முடியும். ஆனால் அதைச் செய்தோமா?
கூட்டமைப்பை ஈ.பி.டி.பியுடன் சேர விடாமல் தமிழ் தேசியக் கட்சிகள் என்ற பெயரில் சைக்கிளும் வீடும் இணைந்திருக்கலாம்.
ஆனால் அது நடக்கவில்லை.
ஒற்றுமையாக ஒன்றாகுங்கள் என்று பலமுறை கூறியபோதும் சைக்கிள் தனித்துவமானது, துரோகிகளோடு எல்லாம் சேராது என்று கூறிவிட்டு இன்று அதே துரோகிகள் இன்னொரு துரோகிகளோடு சேர்ந்ததைக்கண்டு துள்ளுவது வேடிக்கையாகத் தெரியவில்லையா?
கூட்டமைப்பு தமிழர் நலனிலே நேர்மையற்ற ஒரு அமைப்பு. ஒளிச்சு மறைச்சு மெல்லமெல்ல துரோகிகளாவதை விடுத்து பளிச்சென்று அன்றே மாறியிருக்கவேண்டும்.
ஆனால் இவ்வளவு காலமும் தேசியம் என்ற ஒன்றைக் காட்டி தன்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு பம்மாத்துக் காட்டியிருக்கிறது.
இன்றைய சூழலிலே உண்மையான தமிழர் நலன் என்கின்ற விடயம் எந்தக் கட்சியிடமும் இல்லை.
எல்லோருமே தமது அரசியல் வங்குரோத்துக்காக தமிழ் மக்களை பகடையாக பயன்படுத்துகின்றனர்.
பச்சை மட்டையும் பிஸ்டலும் எப்பொழுது மௌனமாயினவோ அப்பொழுதிலிருந்தே உறங்கிக்கிடந்த அத்தனை துரோகிகளும் உயிர்த்தெழ தொடங்கினார்கள்.
இதன் பட்டியல் இன்னுமின்னும் நீண்டுகொண்டே போகும்.
ஏனெனில், துரோகியாவதும் துரோகியாக்குவதும் தமிழனுக்கு கைவந்த கலையாகும்!
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Samaran அவர்களால் வழங்கப்பட்டு 27 Mar 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Samaran என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.