பூந்தமல்லியில், நேற்றிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் அன்பழகனை, சிலர் அரிவாளால் தாக்கியுள்ளனர்.
பூந்தமல்லி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலைபார்ப்பவர், அன்பழகன். இவர், நேற்று இரவு காட்டுப்பாக்கம் ஹட்கோ நகர்ப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் வேகமாக வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி விசாரித்த காவலரை, வண்டியில் வந்தவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
இதையடுத்து, அருகில் இருந்த சில காவலர்கள் காரில் சென்று அந்த மூவரையும் மடக்கிப் பிடித்துக் கைதுசெய்தனர், அதன்பின் நடந்த விசாரணையில், அவர்கள் மது அருந்திவிட்டு போதையில் காவலரைத் தாக்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர்கள் பன்னீர்செல்வம், சுதீஸ்குமார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
காயம்பட்ட காவலர் அன்பழகன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வாகனத்தில் வந்தவர்கள், காவலரைத் தாக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.