பாகிஸ்தான் பிரதமருக்கு நடந்த அவமரியாதை!

அமெரிக்க விமான நிலையத்தில் சாதாரண பயணிகளைச் சோதிப்பதுபோல, பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன்(Khaqan) அபாசியையும் சோதனைசெய்துள்ளனர். இந்தக் காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஷாஹித் காக்கன் அபாசி

தீவிரவாதிகளுக்குத் தொடர்ந்து அடைக்கலம்கொடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் மீது சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார். நேற்று, அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு அமைப்பு, அணு ஆயுதப் பரவலில் பாகிஸ்தான் ஈடுபடுவதாகக் கூறி, பாகிஸ்தானைச் சேர்ந்த 7 நிறுவனங்கள் உட்பட, 23 நிறுவனங்களைத் தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால், அணுசக்தி விநியோக நாடுகள் குழுவில் உறுப்பினராக வேண்டும் என்ற பாகிஸ்தானின் விருப்பத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காக்கன் அபாசியை சாதாரணப் பயணிகளைச் சோதனை செய்வதுபோல, அவரின் மேல் சட்டையைக் கழற்றி சோதனை நடத்தியுள்ளனர். ஒரு கையில் மேல் சட்டை, மறு கையில் சூட்கேஸுடன் அவர் செல்லும் வீடியோ காட்சி, ஊடகங்களில் நேற்று வெளியாகி, வைரலாகப் பரவிவருகிறது.