யாழ். மாநகரசபையில் ஆட்சியமைக்க தமிழ்தேசிய கூட்டமைப்பு ஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை.தமிழ்தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஈ.பி.டி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசினார்.இந்த பேச்சுவார்த்தையில் நாம் ஆதரவு கேட்கவில்லை என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
ஈ.பி.டி.பி கட்சியுடன் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும், இதனடிப்படையிலேயே யாழ். மாநகரசபையில் ஈ.பி.பியினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஒத்துழைப்பு வழங்கினார்கள் எனவும், சகல பிரதேச சபைகளிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஈ.பி.டி.பி ஆதரவு வழங்கும் எனவும் கூறப்படுகிறது.இது தொடர்பாக கேட்டபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “உள்ளுராட்சி சபை தேர்தல் நிறைவடைந்த உடனேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பகிரங்மான அறிவிப்பை விடுத்திருந்தது.
அந்த அறிவிப்பு சகல பிரதேச சபைகள், நகர மற்றும் மாநகர சபைகளிலும் அதிகபடியான ஆசனங்களை பெற்றவர்கள் ஆட்சியமைக்க மற்றவர்கள் உதவ வேண்டும் என அந்த அறிவிப்பை அப்பட்டமாக மீறும் வகையில் யாழ்.மாநகரசபை மேயர் தெரிவின்போது இரு கட்சிகள் நடந்து கொண்டன.
ஆகவே, இனிமேல் எங்களுடைய அறிவிப்பை நாங்கள் மட்டுமே கடைப்பிடித்துக் கொண்டிருப்பதால் பயனில்லை. எனவே நாங்கள் அதனை மீறி சாவகச்சேரி நகரசபையில் அதிகபடியான ஆசனம் பெற்ற தமிழ்தேசிய மக்கள் முன்னணியை பின்தள்ளி நாங்களே ஆட்சியமைத்துள்ளோம்.மேலும், யாழ். மாநகரசபை மேயர் தெரிவு ஆரம்பமாகும் வரை எந்த கட்சியும் தங்கள் இணக்கப்பாட்டை கூறியிருக்கவில்லை. எனவே இனிவரும் சகல சபைகளிலும் நாங்களே ஆட்சியமைக்கும் வகையில் செயற்படுவோம்.
காரணம் நான் முன்னர் கூறியதைபோல் எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் மட்டுமே கடைப்பிடிப்பதால் பயன் ஒன்றும் இல்லை.மேலும், நாங்கள் ஆட்சியமைப்பதற்காக ஈ.பி.டி.பி கட்சியின் ஆதரவை கேட்டதாகவும், ஈ.பி.டி.பியின் ஆதரவுடனேயே தமிழ்தேசிய கூட்டமைப்பு யாழ். மாநகரசபையில் ஆட்சியமைத்ததாகவும் வெளியாகும் செய்திகள் பொய்யானவை.
உள்ளுராட்சி சபைகளில் அதிகபடியான ஆசனங்களை பெற்றவர்கள் ஆட்சியமைக்கலாம் என்ற எங்களுடைய நிலைப்பாட்டை நாங்கள் வெளிப்படுத்திய போது பிரத்தியேகமாக என்னுடன் ஒன்றும் பேசவில்லை எனக் கூறியிருந்தார்.
அதற்காக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.பி.டி.பி கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.இதன்போது தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு தாருங்கள் என கேட்கவில்லை. எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளார். அதுவே நடந்தது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.