யானையும் வீணையும் இணைந்து வீட்டுக்கு ஆதரவு!!

ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடன் காரைநகர் பிரதேச சபையின் ஆட்சியையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.ஏற்கனவே பெரும்பான்மை ஆசனங்களை பெறாத நிலையில், ஈ.பி.டி.பி இன் ஆதரவுடன் சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

காரைநகர் பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோரை தெரிவுசெய்யும் முதலாவது அமர்வு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

பதினொரு ஆசனங்களைக் கொண்ட யாழ் காரைநகர் பிரதேச சபையில் கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்று ஆசனங்களையும் ஈ.பி.டி.பி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தது.அவர்களை விட சுயேட்சைக் குழு மூன்று ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் ஒரு ஆசனத்தையும் தன்வசப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற காரைநகர பிரதேச சபைக்கான தவிசாளர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும சுயேற்சைக்குழு சார்பில் இருவர் பிரேரிக்கப்பட்டனர்.இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பிரேரிக்கப்பட்ட விஜயதர்மா கேதீஸ்வரதாஸ் ஏழு வாக்குகளை பெற்று தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சுயேற்சைக்குழு சார்பில் பிரேரிக்கப்பட்ட உறுப்பினர் மூன்று வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொண்டனர்.அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் வாக்கெடுப்பில் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.