இந்தியாவில் உயிரிழந்த இளைஞரின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில், குடும்பத்தார் எழுப்பிய சந்தேகத்தின் காரணமாக பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியை சேர்ந்தவர் வகீல் முகமது (27). இவர் மனைவி நஸ்மா.
முகமது கடந்த 6-ஆம் திகதி தனது மாமா ரியாஸ் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மிகவும் சோர்வுடன் காணப்பட்ட முகமது அங்கேயே சரிந்து விழுந்துள்ளார்.
பின்னர் உடனடியாக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட சிகிச்சை பலனில்லாமல் 9-ஆம் திகதி உயிரிழந்தார்.
இதையடுத்து முகமதின் சடலம் புதைக்கப்பட்டது. இந்நிலையில் முகமதை அவர் மனைவி நஸ்மா தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக அவர் குடும்பத்தார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதையடுத்து முகமதின் உடல் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து முகமதின் மாமா ரியாஸ் கூறுகையில், மயக்க நிலையில் முகமதை நான் மருத்துவமனையில் சேர்த்த போது அவர் போதை வஸ்துவை சாப்பிட்டாரா என மருத்துவர் கேட்டார், ஆனால் பாக்கு போடும் பழக்கம் கூட அவருக்கு கிடையாது.
முகமது இறந்த பின்னர் அவர் மனைவி நஸ்மாவின் பையில் இருந்த ஓட்டுனர் உரிமத்தில் அவரின் கணவர் பெயர் சல்மான் என இருந்தது.
சல்மான், நஸ்மாவின் உறவுக்கார இளைஞர் ஆவார், இருவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது, அதனால் தான் மெதுவாக கொல்லும் விஷத்தை முகமதுக்கு கொடுத்து கொன்றுவிட்டனர் என கூறியுள்ளனர்.
இதனிடையில், கடந்த 5 மற்றும் 6-ஆம் திகதி நஸ்மா, சல்மானுடன் தனியாக பேசுவதை பார்த்த முகமது மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.
இதோடு நஸ்மாவும், சல்மானும் போனில் பேசுவதையும் முகமது தனது போனில் ஆதாரமாக வைத்துள்ளதாக முகமது குடும்பத்தார் கூறியுள்ளனர்.
இதையடுத்து முகமதின் தந்தை பொலிசில் இது குறித்து புகார் அளித்த நிலையிலேயே முகமது சடலத்தை பொலிசார் பிரேத பரிசோதனை செய்ய தோண்டி எடுத்தனர்.
அதன் முடிவுகள் வந்த பின்னர் இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்யப்படும் என பொலிசார் கூறியுள்ளனர்.