நமது உடலின் முக்கிய உள்ளுறுப்புகளில் ஒன்று, சிறுநீரகம். எனவே அது பாதிக்கப்படாமல் காப்பது அவசியம்.
சில அறிகுறிகள் மூலம், சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அறியலாம்.
அவை பற்றி…
சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படுவது, நுரையுள்ள சிறுநீர் வெளியேற்றம், இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிக்கும்போது அழுத்தத்தை உணர்வது இது போன்ற அறிகுறிகள் இருந்தால் சிறுநீரகக் கோளாறு உள்ளது என்று அர்த்தம்.
சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்தால் உடலின் நீர்மம் வெளியேற்றப்படாமல் உடலிலேயே தேங்கி இருக்கும். இதனால் உடலின் பல்வேறு இடத்தில் வீக்கத்தை உண்டாக்கும்.
ரத்தத்தில் கழிவுகளின் தேக்கம் அதிகரித்தால், வாய் துர்நாற்றத்தை உணரக் கூடும். அதுவே சிறுநீரகப் பிரச்சினை முற்றிய நிலையில் இருந்தால், உணவின் சுவையை உணர முடியாமல், பசியின்மை போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும் ஹார்மோனின் அளவு குறைந்து, உடல் செல்களுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் இருந்தால், மிகுந்த சோர்வை உணரக் கூடும். இது அப்படியே நீடிப்பது, சிறு நீரக நோயின் அறிகுறியாகும்.
முதுகின் மேல் பகுதியில் அதிக வலியை உணர்ந்தால் அது சிறுநீரகக் கற்கள் அல்லது சிறுநீரகங்களில் நோய்த் தொற்றுகள் உள்ளது என்பதைக் காட்டுகிறது.
சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் உடலில் ஆக்சிஜனின் அளவு குறைந்து, மூச்சுவிடுவதில் அதிக சிரமம் ஏற்படும்.
ரத்த சோகை, தலைச்சுற்றல், ஞாபக மறதி போன்ற பிரச்சினைகள் மூலம் அதிக அவதிகளுக்கு உள்ளானால் சிறுநீரகப் பாதிப்பு மோசமாக உள்ளது என்று அர்த்தம்.
உடலில் கழிவுகளின் தேக்கமும், ரத்தத்தில் நச்சுக்களின் அளவும் அதிகரித்து, கடுமையான அரிப்பு போன்ற சருமப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிட்டால், சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்துள்ளது என்று அர்த்தம்.
நமது இயல்பான உடலியக்கத்துக்கு சிறுநீரகத்தின் சிறப்பான செயல்பாடு அவசியம். எனவே, அறிகுறிகளை உணர்ந்து உரிய முன்னெச்சரிக்கை செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.