நாடாளுமன்ற அ.தி.மு.க உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் ராமசாமி ஆகியோர் ஏன் திருமணம் செய்துகொண்டனர் என்பது பற்றி இருவரும் விளக்கமளித்துள்ளனர்.
அ.தி.மு.க-வின் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பாவுக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சட்ட ஆலோசகர் ராமசாமி என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது. ராமசாமியின் மனைவி சத்யபிரியா தொடர்ந்த வழக்கில், அவர் இன்னொரு திருமணம் செய்யக் கூடாது என மதுரை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. ஆனால், தடையைமீறி சசிகலா புஷ்பா – ராமசாமி திருமணம் டெல்லியில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இவர்கள் ஏன் திருமணம் செய்துகொண்டனர் என்பது பற்றி இருவரும் விளக்கமளித்துள்ளனர், முதலில் பேசிய ராமசாமி, “நான் சசிகலா புஷ்பாவை முன்றாவதாகத் திருமணம் செய்துகொண்டுள்ளேன். என் முதல் மனைவி விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவருக்கும் எனக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. என் முதல் மனைவி இறந்த பிறகு, என் மகளைப் பாதுகாக்கவே சத்யபிரியாவை 2 வது திருமணம் செய்துகொண்டேன். எங்களின் திருமணத்துக்குப் பிறகு, சத்யபிரியா என் மகளைக் கொடுமை செய்யத் தொடங்கினார். மேலும், அவரின் தம்பி என் மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார். இது குறித்து நான் போலீஸில் புகார் அளித்திருந்தேன். பிறகு நான், சத்யபிரியாவைவிட்டு விலக ஆரம்பித்தேன். அதன் பின், சசிகலா புஷ்பா என் மகளைப் பாதுகாப்பார் எனத் தோன்றியது. எனவே, அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினேன்.
அது மட்டுமல்லாமல் சத்யபிரியாவுக்கு முன்னரே ஒரு திருமணம் நடந்துள்ளது. அதை என்னிடமிருந்து மறைத்துவிட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அவரின் முன்னாள் கணவர் நீதிமன்றத்தில் சத்யபிரியாவுக்கு உரிமை கோரினார், அதைக் காண்பித்தே மதுரை நீதிமன்றத்தில் என் மறுமணத்துக்கு அனுமதி பெற்றேன். சசிகலா புஷ்பாவும் தன் கணவருடன் விவாகரத்து பெற்றிருந்தார். எனவே, நாங்கள் இருவரும் அரசின் அனுமதி பெற்றே திருமணம் செய்துகொண்டோம்” எனத் தெரிவித்தார்.
இவரைத் தொடர்ந்து பேசிய சசிகலா புஷ்பா, “ராமசாமி கடந்த ஒரு வருடமாக, அ.தி.மு.க என்மீது தொடர்ந்த வழக்குகளை எதிர்கொள்ள எனக்கு உதவினார். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தோம். அவரைப் பற்றி அனைத்தும் எனக்குத் தெரியும். சத்யபிரியாவை தொலைக்காட்சியில் பார்த்தேன். தன் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அழுதுகொண்டே ஓடினார். அதைப் பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருந்தது. அந்தக் குழந்தையை என்னிடம் வாங்கித் தாருங்கள், நான் வளர்க்கிறேன் என ராமசாமியிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன். இது மட்டுமே என்னால் செய்ய முடியும். நான் விவாகரத்து பெற்ற பின்னரே ராமசாமியைத் திருமணம் செய்துகொண்டேன். சத்யபிரியாவின் பின் அரசியல் உள்ளது. நான் டி.டி.வி.தினகரன் கட்சியைச் சேர்ந்தவள் என்பதால் எதிரில் இருப்பவர்கள், எனக்கு நெருக்கடி தருகிறார்கள்” எனக் கூறினார்.