சென்னையை அடுத்த குமணஞ்சாவடியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவலர் அன்பழகனைத் தாக்கிய மூன்று கொள்ளையர்கள், சிறப்பாகக் கவனிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராகப் பணியாற்றுபவர் அன்பழகன். இவருக்கு, நேற்று இரவுப்பணி. «பூந்தமல்லி அருகே உள்ள குமணஞ்சாவடியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின்னல் வேகத்தில் ஒரே பைக்கில் மூன்றுபேர் வேகமாக வந்தனர். அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்தார் அன்பழகன். அப்போது, திடீரென அவரை அரிவாளால் வெட்டத் தொடங்கினர் பைக்கில் வந்தவர்கள். இதனால், நிலைகுலைந்த அன்பழகன், அவர்களிடமிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் பைக்கில் வந்தவர்கள், அவரை விரட்டி விரட்டி வெட்டினர். இதில், கை, தொடை பகுதிகளில் பலத்த காயமடைந்தார் அன்பழகன். இதுகுறித்து அன்பழகன், உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அதன்பேரில், அன்பழகனை வெட்டியவர்களைத் தேடினர். அவர்கள், திருவேற்காடு பகுதியில் சென்றபோது, போலீஸார் மடக்கிப்பிடித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “காவலர் அன்பழகன், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். யாரிடமும் அதிர்ந்துகூட பேசமாட்டார். அதே நேரத்தில், குற்றவாளிகளை விசாரிப்பதில் கைதேர்ந்தவர். அவரை பைக்கில் வந்தவர்கள் வெட்டிவிட்டுத் தப்பிவிட, தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்டோம். உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை நடந்துள்ளது. உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
காவலர் அன்பழகனை வெட்டியவர்கள், சென்னை நொளம்பூரைச் சேர்ந்த சதீஷ்குமார், கோயம்பேட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம், திருவேற்காட்டைச் சேர்ந்த ரஞ்சித் ஆகியோர் என்று தெரியவந்தது. இதில், சதீஷ்குமார் மீது நொளம்பூர் காவல் நிலையத்தில் அடிதடி வழக்கும், மதுரவாயல் காவல் நிலையத்தில் கொலை வழக்கும் உள்ளது. பன்னீர்செல்வம் மீது திருவள்ளூரில் கொலை வழக்கும், கோயம்பேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கும் உள்ளது. இவர்களிடமிருந்து செல்போன், கத்தி, பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். சம்பவம் நடந்தபோது, இவர்கள் போதையில் இருந்துள்ளனர். போலீஸார், இவர்களை விரட்டிப்பிடிக்கும்போது தப்பி ஓட முயன்றுள்ளனர். இதில், அவர்கள் தவறிவிழுந்து பலத்த காயம் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டவுடன், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு சிகிச்சைபெறும் காவலர் அன்பழகனைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.