வைத்தியசாலையில் ஜெயலலிதாவின் நெஞ்சை உடைந்து நடந்த பயங்கரம்!

இந்தியாவின் இரும்பு மனுஷி என்று பல மாநில தலைவர்களால் புகழப்பட்ட ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த நாட்களில், அவர் எப்படித்தான் இருக்கிறார்? என்று தெரிந்து கொள்வதில் அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் துடியாய் இருந்தனர். ஆனால் பல நாட்கள் பதில் கிடைக்கவில்லை, பின் ‘அம்மா இட்லி சாப்பிட்டார், இடியாப்பம் சாப்பிட்டார்’ என்று அமைச்சர்கள் அளந்துவிட்ட பதில்கள் கிடைத்தன.

ஜெயலலிதா இறந்து, கட்சி துண்டாடப்பட்ட பின் திண்டுக்கல் சீனிவாசனே ‘அப்பல்லோவுல அம்மாவ நாங்க யாருமே பார்க்கலை. இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார்னு பொய் சொன்னோம்.’ என்று ஓப்பன் மீட்டிங்கில் தெரிவித்தார்.

ஆனால் ஜெ., மரணம் குறித்து அமைக்கப்பட்டிருக்கும் விசாரணை கமிஷனில் பதிலளித்து வரும் சில முக்கியஸ்தர்கள் ‘அம்மாவை நாங்கள் இத்தனை முறை பார்த்தோம், இந்த இந்த அமைச்சர்கள் பார்த்தார்கள்.’ என்று போட்டுடைக்கிறார்கள்.

அந்த வகையில் முன்னாள் தமிழக தலைமை செயலாளரான ராமமோகன ராவ், கமிஷனில் அளித்திருக்கும் வாக்குமூலத்தில் பகீர் தகவல்கள் சிலவற்றை அள்ளிக் கொட்டியிருக்கிறார் இப்படி…

“அப்பல்லோவில் இருந்தபோது ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அறையிலேயே அவசர ஆபரேஷன் நடைபெற்றது. அவசரமாக அவரது நெஞ்சு பகுதியை உடைத்து, இதயத்தில் கருவிகளைப் பொருத்தினர்.

அதனால், ஏராளமான ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்தது அவர் உடலிலிருந்து. இதைப் பார்த்ததும் பதறிவிட்டேன். அங்கிருந்த டாக்டர்களிடம், ‘அறையில் வைத்து ஏன் ஆபரேஷன் செய்கிறீர்கள்? ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லவில்லையா?’ என்று கேட்டேன். அந்த நேரத்தில் அந்த அறையில் சசிகலா இல்லை.

எய்ம்ஸ் மருத்துவர்கள், எக்மோ கருவியை ஜெயலலிதாவுக்கு பொருத்தி, இருபத்து நான்கு மணி நேரம் அதன் செயல்பாடுகளை கவனிக்க வேண்டும்! என சொல்லினர். ஆனால் அந்த மணி நேரங்கள் கடந்தும் இதயத்தின் செயல்பாட்டில் முன்னேற்றமில்லை. எனவே அந்த கருவியை அகற்றினர். எக்மோ கருவி அகற்றப்பட்ட போது மருத்துவமனையில் வெங்கய்ய நாயுடு இருந்தார்.” என்றும் ராவ் சொல்லியிருக்கிறார்.

ராவ் கூறியிருக்கும் விஷயங்களான திடீர் மாரடைப்பு, எக்மோ கருவி ட்ரீட்மெண்ட் ஆகியன ஷீலா பாலகிருஷ்ணன் அளித்திருக்கும் வாக்குமூலத்திலும் இருப்பது க்ராஸ் செக் செய்து உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா இறந்து சுமார் ஒன்றேகால் ஆண்டுகள் ஆகும் நிலையில் அவரது மரண மர்மங்கள் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.