கூட்டு அரசைப் பதவியில் வைத்திருக்கவேண்டிய தேவை எமக்கு இல்லை. எங்களின் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவித்தாலே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் சாதகமாகப் பரிசீலிப்போம்.
இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை அலைபேசியில் பேசினேன்.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இரண்டு தடவைகள் அன்று அலைபேசியில் பேச்சு நடத்தினேன்.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் முதல் நகர்வுதான் கூட்டு அரசுதான். தலைமை அமைச்சர் இப்போது இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றார்.
அடுத்தது சபாநாயகர். இறுதியாக அரச தலைவர். மகிந்த தரப்பிடம் ஆட்சியைக் கொடுக்க முடியாது. அது பிரயோசனமற்றது.
அதேபோன்று கூட்டு அரசும் எதுவும் செய்யாமல் பதவியில் இருப்பதும் பிரயோசனமற்றது. அவர்கள் பதவியில் இருக்கவேண்டும் என்பதற்காக ஆதரவு கொடுக்க முடியாது. சில விடயங்களில் எங்களுடன் வெளிப்படையாக இணக்கம் காணவேண்டும்.
புதிய அரசமைப்பு முயற்சி அரைவாசித் தூரத்தில் நிற்கின்றது. தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
கடந்த 3 ஆண்டுகளில் இவற்றை நிறைவேற்றுவதற்கு தாமதம் நிலவியது. இதனை இனியும் இழுத்தடிப்பதில் அர்த்தமில்லை. காலம் கடத்துவதற்கு கூட்டு அரசை பதவியில் தொடர அனுமதிக்க முடியாது.
இந்த விடயங்கள் தொடர்பில் கூட்டு அரசு எமக்குச் சாதகமான பதிலை அடுத்த மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் வழங்கவேண்டும்.
அன்று எமது கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் முடிவு எடுப்போம் என்றார்.