பி.எம்.டபிள்யூ கார் கம்பெனியின் 11-ம் ஆண்டுவிழாவில் கலந்துகொள்வதற்காக நாளை செங்கல்பட்டு வருகிறார் சச்சின் டெண்டுல்கர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ளது மஹிந்திரா வேல்டு சிட்டி. இங்கு பன்னாட்டு தொழிற்சாலைகள் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள பி.எம்.டபிள்யூ கார் தொழிற்சாலையில் 11-ம் ஆண்டுவிழா நாளை நடைபெற உள்ளது. இதில் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொள்கிறார். தொழில்நுட்பங்களில் இந்தியா வலிமையான நிலையை அடைவதற்காக இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பி.எம்.டபிள்யூ நிறுவனத்தால் தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படயிருக்கிறது.
முதல்கட்டமாக பி.எம்.டபிள்யூ நிறுவனத்தால் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்படயிருக்கிறது. இதன் தொடக்கவிழாவில் பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பாவா மற்றும் நிர்வாக இயக்குநர் ஜாக்ஹென் ஸ்டால்காம்ப் ஆகியோர் இதில் கலந்துகொள்கிறார்கள். அவர்களுடன் சச்சின் கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாட இருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு இதே தொழிற்சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சச்சின் கார்களை அசம்பிள் செய்து காண்பித்தார்.