மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா தன்னிடம் பேசியதாக பாதுகாப்பு அதிகாரி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த போலீஸ் அதிகாரி வீரபெருமாள், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு ஆஜரானார்.
இவர், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். இதனால், ஜெயலலிதா மரணத்தில் நடந்தது என்ன என்பது குறித்து வீரபெருமாள் அறிந்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்ற அடிப்படையில் அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை கேட்டார்.
ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக போயஸ் கார்டனில் இருந்து அழைத்து சென்ற போது எங்கு இருந்தீர்கள்?, அன்றைய தினம் போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது தெரியுமா?,
ஜெயலலிதா மயங்கிய நிலையில் தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாரா? என்பது போன்று பல்வேறு கேள்விகளை வீரபெருமாளிடம் நீதிபதி ஆறுமுகசாமி கேட்டார். நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் வீரபெருமாள் பதில் அளித்தார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது உங்களிடம் பேசியதாக சசிகலா, தனது வாக்குமூலத்தில் கூறி உள்ளாரே?. அதுபோன்று ஜெயலலிதா பேசினாரா? அவர் உங்களிடம் என்ன கூறினார்? என்று நீதிபதி கேட்டார்.
அதற்கு அதிகாரி வீரபெருமாள், ஸ்கேன் எடுப்பதற்காக அப்பல்லோ மருத்துவமனையின் 2-வது தளத்தில் இருந்து தரைதளத்துக்கு அழைத்து செல்லப்பட்ட போது என்னையும், மற்றொரு பாதுகாப்பு அதிகாரியுமான பெருமாள்சாமியையும் நேரில் பார்த்த ஜெயலலிதா, தற்போது நலமாக இருப்பதாகவும், கவலைப்பட வேண்டாம், சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவேன் என்று கூறியதாக தெரிவித்தார்.
மதியம் 2 மணி வரை சுமார் 3½ மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின்னர் ஆணையத்தில் இருந்து வெளியே வந்த வீரபெருமாள், ‘நீதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். அதை வெளியில் சொல்வது சரியாக இருக்காது’ என்றார்.
ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த அரசு மருத்துவர்கள் 7 பேரிடம் இன்று(புதன்கிழமை) சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்ய ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில் ஆணையத்தில் ஆஜரான சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன், ஒரு வழக்கிற்காக சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக வேண்டியது இருப்பதால் அரசு மருத்துவர்கள் 2 பேரை மட்டும் எனது ஜூனியர் வக்கீல் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார்.
இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். அதன்படி அரசு மருத்துவர்கள் விமலா, நாராயணபாபு ஆகியோரை இன்று குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதன்பின்பு, ஏப்ரல் 6 மற்றும் 7-ந் தேதிகளில் மற்ற 5 அரசு மருத்துவர்கள், முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்பட 11 பேரிடம் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்பின்பு ஆணையத்தில் இருந்து வெளியே வந்த வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நிருபர்களிடம் தெரிவித்தார்.