15 நிமிடங்கள் நடனமாட ரன்வீர் சிங்குக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கு ‘பத்மாவத்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் அவர் நடித்து இருந்த அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் பேசப்பட்டது.
இவர் 2010-ல் பேன்ட் சர்மா பாராத் என்ற படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார். பாமே டாக்கீஸ், ராம்லீலா, லூதெரா, கில் தில், பஜிரோ மஸ்தானி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
ரன்வீர் சிங்குக்கு இந்தியில் பெரிய அளவில் ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறது. அவருக்கும் இந்தி நடிகை தீபிகா படுகோனேவுக்கும் காதல் மலர்ந்துள்ளது.
விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளனர். இதற்காக இருவரும் திருமண நகைகள், உடைகள் வாங்கி வருகிறார்கள்.
அடுத்த மாதம் (ஏப்ரல்) நடக்க உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியில் ரன்வீர் சிங்கை சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அழைத்துள்ளனர்.
இதில் 15 நிமிடங்கள் அவர் நடனம் ஆடுகிறார். இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது மற்ற இந்தி நடிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.