தமிழ் சினிமா அவ்வப்போது சிறிய பெரிய பிரச்னைகளை சந்திப்பதும் அதிலிருந்து மீள்வதும் வழக்கம். அதேபோல் ஒரு பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல, அதற்கான போராட்டம் நடத்தப்படும்போது சினிமாவின் அமைப்புகளுக்குள் ஒற்றுமையில்லா தன்மையிலிருந்தது.
பல ஆண்டுகள் கழித்து தயாரிப்பாளர்கள் சங்கம், ஃபெப்ஸி, நடிகர்கள் ஆகியோரது முழு ஒத்துழைப்பு மூலம் நடத்தப்படும், தமிழ்த் திரைப்படத் துறையின் இந்த ஸ்டிரைக் குறித்தும்,
முந்தையக் காலகட்டங்களிலிருந்து இந்தத்துறை எவ்வளவு மாறியிருக்கிறது எனப் பல்வேறு விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்தார் தென்னிந்திய சினிமாவில் பல அமைப்புகளின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குநர் கேயார்.
`கடந்த 40 வருட காலத்தில் சினிமா எவ்வளவோ மாறியிருக்கு. படம் தயாரிக்கும் முறை, அதை வர்த்தகம் செய்யும் முறை என ஆரம்பித்து வருடத்திற்கு சுமார் 80 படங்களிலிருந்து இன்று 200-250 படங்கள் என ரிலீஸ் ஆகிக்கொண்டிருக்கிறது.
எனினும், தயாரிப்பாளர்கள் நலிவடைந்து கொண்டேயிருக்கிறார்கள், விநியோகஸ்தர்கள் என்னும் வர்க்கம் இன்று குறைந்து விட்டார்கள்” எனத் தனது அனுபவத்தை ரிவைண்டு செய்தவரிடம், சில கேள்விகளைக் கேட்டோம்.
கியூப் , யூ.எஃப்.ஓ பிரச்னைக்குப் புதுப்படங்கள் ரிலீஸ் செய்யக் கூடாது என்பது சரியா?
“12 வருஷத்துக்கு முன்னாடி ஒரு நட்சத்திர ஒட்டலில் எங்களை (தயாரிப்பாளர்களை) அழைத்து இந்த கியூப் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினர்.
அன்று எங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் என்னவென்றால், `இது வளரத் தொடங்கும்போது, விரிவடையும்போது ஒரு `மோனோபாலி’ ஆகி விடாதா?’ என்று நாங்கள் கேட்டதற்கு, ஒரு சிறிய அளவிலான தியேட்டர்களில் மட்டும்தான் இந்தத் தொழில்நுட்பம் கொண்டு வரப்படும்’ என்றனர்.
பின் வந்த தலைமைகளில் எவரும் இவர்களுக்கான மாற்று வழிமுறையையோ, போட்டி நிறுவனத்தையோ தேடவில்லை. சிலர் தங்கள் சுய ஆதாயத்திற்காக, பின்விளைவுகளை யோசிக்காமல் இந்த நிறுவனத்தை விரிவாக்க அனுமதித்தனர்.
அவர்களது பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. கியூப்பிற்கு பின் யூ.எஃப்.ஓ அதைத்தொடர்ந்து சில சிறு,குறு நிறுவனங்களும் வந்தன. அவர்களது புத்திசாலித்தனத்தால் நம்மை அடிமைப்படுத்தி வைத்துவிட்டனர்.”
பரவலாக திரைப்படத்துறை லாபகரமானதாக இல்லை என்ற ஒரு சிறு வருத்தம் எல்லாத் தயாரிப்பாளர்களிடமும் இருக்கிறதே? அதற்கு என்ன காரணம்?
“தமிழ் சினிமாவில் கடந்த 8,10 வருடமாக இதே நிலைதான். ஆரம்பகால கட்டத்தில் ஒரு தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பார்.
ஒரு படம் எடுக்கிறோம் என்று சொன்னால் அதற்குத் திரையரங்கங்கள் ஒரு அட்வான்ஸ் தந்து வந்தன, விநியோகஸ்தர்களும் ஒரு அட்வான்ஸ் தருவார்கள்.
இந்தமாதிரி `இன்வெஸ்ட்மென்ட் ஷேரிங்’ முறை இருந்தது. படப்பிடிப்பு சுமுகமாக நடந்து அந்தந்த தயாரிப்பாளர்களுக்கு உகந்த விநியோகஸ்தர்களுக்கு படம் போட்டுக் காட்டப்படும்.
அவர்களது கருத்தைப் பெற்றபிறகு மாற்றங்கள் இருப்பின் அதைச் செய்து வெளியிடப்படும். படத்தின் வருமானம் சீராக எல்லோருக்கும் சென்றடையும். தங்கள் பணத்தைதிருப்பி எடுக்கும் வரை அந்தத் திரையரங்கில் இந்தப் படம் ஓடும்.
இந்தச் சூழலிருந்து வந்த நேரத்தில் 90 முதல் 95 சதவிகிதப் படங்கள் போட்ட முதலைத் திரும்ப எடுத்தும், மிதமான மற்றும் பெரிய லாபகரமான படங்களாகவும் இருந்தன.
அந்தத் தயாரிப்பாளர்கள் மீண்டும் படம் எடுக்கத் தொடங்குவார்கள். இதில் 5 முதல் 10 சதவிகித படத் தயாரிப்பாளர்கள்தான் நஷ்டமடைந்தார்கள்.
ஆனால், இன்றைய நிலைமையோ தலைகீழ். வெறும் 5 சதவிகித திரைப்படங்களே லாபகரமானதாய் உள்ளது. எந்தத் திரையரங்கமோ, விநியோகஸ்தரோ படத்திற்கு நேரடியாக அட்வான்ஸ் தருவதில்லை.
தயாரிப்பாளரே முதல்போட்டு எடுக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது; இதில் 85 சதவிகிதம் சின்னப் படங்கள். இத்தகைய சின்னப்படங்களுக்கு ஸ்கிரீன்கள் கிடைப்பதில்லை. இதனால் பல படங்கள் நஷ்டத்தைச் சந்திக்கிறது.
பெரிய படங்களின் தயாரிப்பு முதலும் சகட்டு மேனிக்கு உயர்ந்து காணப்படுகிறது. இதன் அடிப்படை, நடிகர்கள் சம்பளம் அதிமாக வாங்குகிறார்கள்.
ரஜினி நடித்த `தம்பிக்கு எந்த ஊரு’ படத்தைப் பஞ்சு அருணாசலம் தயாரித்தார். அவரது படங்களுக்கு சிட்டி, என்.எஸ்.சி எனப்படும் ஏரியாவிற்கு நான்தான் விநியோகம் செய்வதுண்டு.
அன்றைக்கு அவரது படத்தின் பிசினஸ் 1கோடி. அவர் சிங்கிள் பேமென்டாக வாங்கிய சம்பளம் 7 லட்சம். படத்தின் பட்ஜெட் 70 லட்சம். நிதிநிலையில் வெறும் 10% தான் கதாநாயகனின் சம்பளம்.
இன்றைக்கு, எந்தப் பெரிய நாயகன் சம்பளமும் பட்ஜெட்டில் 40% குறையாமல் இல்லை. இவர்களது சம்பளம் மட்டுமல்ல துணை மற்றும் குணசித்திர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளமும் அதிகமாகிவிட்டது.
இதை விற்பனை செய்ய தயாரிப்பாளர் ஒரு பெரிய விலை வைக்க வேண்டும். இல்லை, விநியோகஸ்தர் கொடுக்கும் விலையைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
இதில் பெரும்பாலும் நஷ்டம்தான். இந்த நாயகனை வைத்து படம் தயாரித்தோம் என்ற வெட்டி கௌரவத்தில் அடுத்த படத்தை தொடங்க வேண்டியதுதான்.
எம்.ஜி.ஆர் சிவாஜி நினைத்திருந்தால் தங்களது படங்களைத் தாமே தயாரித்திருக்கலாம். எனினும் அவர்கள் தயாரிப்பாளர்களின் நலன் கருதி வெளி கம்பெனிகளுக்காக நடித்தனர்.
இன்றைய ஹீரோக்கள் தன்னை ஏற்றிவிட்டத் தயாரிப்பாளர்களுக்குப் படம் கொடுக்காமல். தாங்களே படம் தயாரிப்பது, தங்கள் குடும்பத்துக்குள்ளே படம் கொடுப்பது எனச் செய்து வருகிறார்கள்.
இன்றைக்கு டாப் நிலையில் இருக்கும் நடிகர்கள், அவர்களை தூக்கிவிட்ட படத்தயாரிப்பாளரை மறந்து விடுகிறார்கள். இந்தத் தடவை நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்கச் சொல்லி கோரிக்கைகள் வலுத்துவருகிறது.
அது எப்படி சாத்தியமாகும் என்று தெரியவில்லை. இன்றுவரை தங்கள் தயாரிப்பாளர்கள் யார் என்பது இந்தப் பெரிய ஹீரோக்களின் சாய்ஸ்தான்.’’
விநியோகஸ்தர்கள், திரையரங்குகள் சரிவர கணக்குகளைக் கொடுப்பதில்லை எனப் புகார்கள் இருக்கிறதே?
“தனித் தனியாக இருந்த தியேட்டர்களை, இன்று க்ரூப் லீசிங் என்ற முறையில் செல்வாக்குள்ள விநியோகஸ்தர் ஒருவரே 70, 80 திரையரங்குகளை கையகப் படுத்தி வைத்துக்கொள்கிறார்.
இன்றைக்கு சினிமா இந்த மாதிரி ஒரு பத்துப் பேரிடம் சிக்கித் தவிக்கிறது. இப்படி, திரைக்கு வரும் படங்களைத் தங்கள் நிபந்தனைக்கு எடுத்துத் திரையிட்டு எதோ ஒரு கணக்கை கொடுத்து வருகிறார்கள்.
தற்போது எந்த விநியோகஸ்தரும் முன்பணம் தருவதில்லை, எந்தத் திரையரங்க உரிமையாளரும் முன்பணம் தருவதில்லை. இன்வெஸ்ட்மென்ட் ஃப்ரீ ரிட்டன்ஸ் என்பதால், கூடுதல் ஸ்கிரீன்ஸ் மற்றும் கல்யாண மண்டபங்கள் கட்டி வருகிறார்கள்.’’
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்திருக்கும் இந்த முழு வேலைநிறுத்தம் சரியான பாதையில் போகிறதா?
“பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டிருக்கிறது. இது நல்ல முயற்சிதான். இதில் விசேஷம் என்னவென்றால், எந்தக் காரியமாக இருந்தாலும் அதற்கு முட்டுக்கட்டைப்போட எப்போதுமே ஒரு கும்பல் இருக்கும். அவர்களும் தமிழ் சினிமாவின் தவறான போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதால் இதற்கு ஆதரவளித்து வருகிறார்கள்.