பேரு வேண்டுமா..? நீர் வேண்டுமா? தமிழிசை சொன்ன பதில்

ஊழல் சின்னமான குக்கரை கொடுக்காமல் தடுத்து நிறுத்தியிருப்பது நல்லது தான். குக்கர் சின்னத்தை தடைசெய்ததை நான் வரவேற்கிறேன்  என்று தடால் அலடியாக தினகரனுக்கு எதிராக பேசியதுமட்டுமில்லாமல், காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் தமிழிசை செளந்தரராஜன் சொல்லியிருப்பது எல்லோரையும் ஒரு நிமிடம் யோசிக்க வைத்திருக்கிறது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழிசை

அரியலூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்திற்கு வந்த அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வி.கைகாட்சியில் அமைக்கப்பட்ட மாவட்ட விவசாய அணியின் கட்சி அலுவலகத்தைத்  திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”மத்தியில் உள்ள பாஜக அரசு எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில்  ஒன்றரை லட்சம் கோடி மதிப்பீட்டில் பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக பயிர்காப்பீடு, மண்வள அட்டை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயிர்காப்பீடு திட்டத்திற்காக தமிழகத்திற்கு மட்டும் 2ஆயிரத்து 700கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சில விவசாய சங்க பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள். காவிரி பிரச்சனைக்காக தற்போது நாம் போராடி வருகிறோம். இதில் பாஜகவிற்கு மாற்றுக்  கருத்து இல்லை.

ஆனால் காவிரி பிரச்னைக்காக போராட்டங்கள் செய்யும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் நீண்ட காலமாக மத்தியில் ஆட்சி செய்த போது காவிரி பிரச்னைனய தீர்க்க நடவடிக்கை எடுக்காதவர்கள் இப்போது பி.ஜே.பி யை மட்டும் கங்கணம் கட்டிக்கொண்டும் எல்லோரும் குற்றம் சாட்டுகிறார்களே இதற்கு என்ன அர்த்தம் நாங்கள் வளர்ந்துகொண்டிருக்கிறோம் எங்கள் செல்வாக்கு உயர்ந்துகொண்டிருக்கிறது. இந்த நிகழ்வு பிடிக்காதவர்கள் எப்படியாவது எங்கள் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதாகப் பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அது கூடிய விரைவில் தவிடு பொடியாகும். தற்போது மத்திய அரசால் எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் அத்திட்டத்தைக் கண்டித்து எங்கு எப்படி போராட்டம் நடத்தாலாம் எனத் தேடி தேடி போராட்டம் செய்வது தமிழக அரசியல் கட்சிகள் எண்ணமாக உள்ளது. இப்போக்கை மாற்றிக் கொண்டு தமிழ்நாடு வளர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

தயவு செய்து மாணவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள். கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு அரசியலில் முகவரியும் அடையாளமும் வேண்டுமென்பதற்காக மாணவர்களைத் தேடி போய் அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள். நீங்கள் உபதேசம் சொல்லி மாணவர்கள் வளரும் நிலையில் தமிழக மாணவர்கள் இல்லை. அதை விட அறிவாளிகளாகத்தான் உள்ளார்கள். அவர்களை விட்டுவிடுங்கள். அவர்களுக்கென்று எதிர்காலம் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 2 நாட்கள் உள்ளது. பிரதமர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். இதில் நல்ல முடிவு ஏற்படும் என எண்ணுகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் தமிழக அரசு நீதிமன்ற அவதூறு வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக வரும் தகவல் உறுதியற்றது. அதற்கு அவசியம் இருக்காது. காவிரியில் தமிழகத்திற்குரிய உரிமை பாதுகாக்கப்படும். உச்சநீதிமன்றம் தீர்ப்பில் சொல்லி உள்ளபடி அதனை நடைமுறைப்படுத்தப்படும் என்பது எனது கருத்து. பெயரில் ஒன்றுமில்லை. பேரு வேண்டுமா நீர் வேண்டுமா என்றால் நீர்தான் வேண்டும். குக்கர் சின்னம் தடைசெய்யப்பட்டுள்ளது வரவேற்தக்கது. குக்கர் என்றதும் நினைவுக்கு வருவது 20ரூபாய் டோக்கன் தான். ஊழல் சின்னமான குக்கரைக் கொடுக்காமல் இருப்பது நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து என முடித்துச் சென்றார்.