வீட்டுக்குள் குவியலாகப் பாம்புக்குட்டிகள்; அதிர்ச்சியில் மக்கள்!

வீட்டுக்குள் குவியலாக இருந்த பாம்புக் குட்டிகளால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர் குடியாத்தம் மக்கள்.

பாம்புக்குட்டிகள்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகளான இந்திரா தனது வீட்டின் பின் பக்கம் தண்ணீர் பிடிக்கச் சென்றிருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் ஏதோ வெள்ளையாகத் தெரிந்ததால் அருகில் சென்று பார்த்திருக்கிறார். அப்போதுதான் அது பாம்பு முட்டைகள் என்று தெரிந்துகொண்டவர், அதன் அருகிலேயே பாம்புக் குட்டிகள் குவியலாக நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார். உடனே குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அந்தத் தகவலில் பேரில் உடனே அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் அங்கிருந்த சுமார் 70-க்கும் மேற்பட்ட சாரைப் பாம்புக் குட்டிகளையும், முட்டைகளையும் கைப்பற்றினர். ஆனால், அந்தக் குட்டிகளுடன் தாய்ப்பாம்பு இல்லை. அதில் அதிர்ச்சியடைந்த தீயணைப்புத் துறையினர் அந்த வீட்டினுள் தாய்ப்பாம்பை தேடிப் பார்த்தனர். ஆனால், அந்தப் பகுதி எங்கும் அது கிடைக்கவில்லை. அதனால், அங்கு கைப்பற்றிய பாம்புக் குட்டிகளையும், முட்டைகளையும் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

பாம்புக்குட்டிகள்

வேலூர் மாவட்ட வனத்துறை அதிகாரி சுமேஷ் சோமனிடம் பேசினோம். “இது விஷமில்லாத தண்ணீர்ப் பாம்பு வகையைச் சேர்ந்தது. ஈரம் நிறைந்த பகுதியில் வசிக்கும் இவ்வகைப் பாம்புகள் தவளை போன்றவைகளை மட்டுமே உண்டு உயிர் வாழும். அந்த வீட்டில் கைப்பற்றிய பாம்புக் குட்டிகளை வனத்துறையினர் எங்களிடம் அளித்திருக்கின்றனர். நீர் நிலைகள் இருக்கும் வனப்பகுதியில் அதனை விட்டு விடுவோம்” என்றார்.