வேலணை பிரதேச சபை ஈ.பி.டி.பி வசம்
Editorial / 2018 மார்ச் 29 வியாழக்கிழமை, பி.ப. 01:00 Comments – 0 Views – 14
– எஸ்.நிதர்ஷன்
தீவகத்தின் வேலணைப் பிரதேச சபையை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தன்வசப்படுத்தியுள்ளது.
இச்சபையின் தவிசாளராக நமசிவாயம் கருணாகரமூர்த்தியும் பிரதித் தவிசாளராக பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளுராட்சி சபைகளுக்கான தவிசாளர் தெரிவுகள் உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.
இன்று (29) வேலணைப் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் பெயர்களைப் பிரேரித்திருந்தது.
இதில் 2 கட்சியினருக்கும் தலா 9 வாக்குகள் கிடைத்து சமநிலை ஏற்பட்டது. இதனையடுத்து குலுக்கல் முறை மூலம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வெற்றி வெற்று சபையின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை 20 உறுப்பினர்களைக் கொண்ட இச் சபையில் கூட்டமைப்பு 8 உறுப்பினர்களையும், ஈபிடிபி 6 உறுப்பினர்களையும், பொதுஐன பெரமுன 2 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக்கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியன தலா ஒரு உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.
இவ்வாறான நிலையில், தவிசாளர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது, கூட்டமைப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாகவும், அதே நேரம் ஈபிடிபிக்கு பொதுஜன பெரமுன கட்சியும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஆதரவாகவும் வாக்களித்திருந்தன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்பன நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.