புதையல் எடுத்துத் தருவதாக ஆசைவார்த்தை கூறி, ஒரு கோடி ரூபாயை ஏமாற்றிய பூசாரியைக் கடத்தி, கடுமையாகத் தாக்கியுள்ளார் ஒரு பெண்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு கோவிலூர் தங்கமாபட்டியைச் சேர்ந்தவர், சக்திவேல். பூசாரியான இவர், புதையல் எடுத்துத் தருவதாகப் பலரிடம் ஏமாற்றி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில், புதையல் எடுத்துத் தருவதாக ஆசைவார்த்தை கூறி, சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார். பணம் வாங்கிய பிறகு, இதோ எடுத்துவிடலாம். அந்த பூஜை செய்ய வேண்டும், இந்த பூஜை செய்ய வேண்டும் என விதவிதமான காரணம் சொல்லி காலம்தாழ்த்தி வந்துள்ளார். ஆசையாய் பணம் கொடுத்துவிட்டு, புதையல் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த அந்தப் பெண், சில ரவுடிகள் மூலமாக பூசாரியைக் கடத்திவிட்டார்.
தாராபுரம் பகுதிக்கு பூசாரியைக் கொண்டுசென்றவர்கள், பூசாரிக்கே ‘பூஜை’ நடத்தியிருக்கிறார்கள். பயங்கர ஆயுதங்களைக்கொண்டு தாக்கியுள்ளனர். இந்நிலையில், பூசாரி காணாமல்போனதாக வந்த புகாரைத் தொடர்ந்து, விசாரணையில் இறங்கியது வேடசந்தூர் போலீஸ். இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான தனிப்படையினர், சின்னத்தாராபுரம் பகுதியில் கடத்தல்காரர்களிடமிருந்து பூசாரியை மீட்டனர். பூசாரியைக் கடத்தித் தாக்கியதற்காக ஏழு பேரை கைதுசெய்து விசாரித்துவருகின்றனர்.