`சசிகலா புஷ்பா யாரைத் திருமணம் செய்தார்?!’ – விசாரித்த சசிகலா

சசிகலா பரோல் காலம் முடிவடைவதற்கு இன்னும் ஐந்து நாள்கள் உள்ளன. தஞ்சாவூரில் உள்ள நடராசனின் வீட்டில் ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார் சசிகலா. “சசிகலா புஷ்பா திருமணம் தொடர்பாக, ஆர்வத்துடன் விசாரித்தார் சசிகலா. `நமக்கு எதிராக சசிகலா புஷ்பாவைப் பயன்படுத்திக்கொண்டது வேறு ஒரு கூட்டம்’ எனத் தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் குறிப்பிட்டிருக்கிறார் சசிகலா” என்கின்றனர் மன்னார்குடி வட்டாரத்தில்.

சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த 20-ம் தேதி மரணமடைந்தார் நடராசன். தஞ்சாவூரிலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்ட உடல், முள்ளிவாய்க்கால் முற்றம் அருகில் அடக்கம் செய்யப்பட்டது. நடராசனுக்குச் சொந்தமான தமிழரசி மண்டபத்தில் நாளை படத்திறப்பு விழா நடக்கவிருக்கிறது. `இந்த நிகழ்ச்சியில் சசிகலா கலந்துகொள்ளவிருக்கிறார்’ என்கின்றனர் மன்னார்குடி சொந்தங்கள். அதேநேரம், குடும்ப உறவுகளுக்குள் நிலவும் மோதல் காரணமாக, பரோல் விடுப்பு காலம் முடிவதற்கு முன்பாகச் சிறைக்குச் செல்லும் முடிவில் இருக்கிறார் சசிகலா. இந்நிலையில், தினம்தோறும் தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்ததில் சசிகலாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவர்களின் சிகிச்சைக்குப் பிறகு இயல்பான நிலைக்குத் திரும்பியிருக்கிறார். இதையடுத்து, தினகரனுக்கு எதிரான குடும்ப உறவுகள் சிலர், சசிகலா கவனத்துக்குச் சில விஷயங்களைக் கொண்டு சென்றுள்ளனர்.

சசிகலாஅவர்கள் பேசும்போது, `அக்கா உயிரோடு இருந்தபோதே அவருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசியவர் சசிகலா புஷ்பா. அவர் இரண்டாவதாக ஒருவரைத் திருமணம் செய்திருக்கிறார். இந்தத் திருமணம் குறித்து, வெளி வட்டாரத்தில் வேறு மாதிரியாகப் பேசுகிறார்கள். நமக்கு எதிராகச் செயல்பட்டவரைத்தான் தினகரன் அருகில் வைத்திருக்கிறார்’ எனக் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட சசிகலா, `புஷ்பா யாரைத் திருமணம் செய்திருக்கிறார்?’ என ஆர்வத்தோடு விசாரித்திருக்கிறார். `நீங்கள் பொதுச் செயலாளர் ஆகக் கூடாது என நீதிமன்றம் வரை சென்று போராடிய ராமசாமியைத்தான் திருமணம் செய்திருக்கிறார்’ என விவரித்துள்ளனர்.

இதனை எதிர்பார்க்காத சசிகலா, `நமக்கு எதிராகச் செயல்பட்டது இந்த ராமசாமி அல்ல. அது வேற ஒரு கூட்டம். அந்தக் கூட்டம்தான் நமக்கும் அக்காவுக்கும்(ஜெயலலிதா) இடையில் விரோதத்தை உண்டாக்கும் வேலைகளைச் செய்தது. இவருக்கு(நடராசன்) எதிராகப் பேட்டி கொடுத்து நமக்கும் அக்காவுக்கும் இடையில் விரோதத்தை உருவாக்கியது அந்தக் கூட்டம்தான். புஷ்பாவும் ராமசாமியும் வெறும் அம்புகள்தான். அவர்களை வேறு சிலர் பயன்படுத்திக் கொண்டனர். நம்மோடு புஷ்பா வந்து சேர்ந்ததில் எந்தவிதத் தவறும் இல்லை’ எனக் கூறியிருக்கிறார். இதில் சமாதானம் அடையாத உறவுகள், `புஷ்பா செய்த துரோகத்தால்தான் நாம் இவ்வளவு இழப்புகளையும் சந்தித்தோம்’ எனக் கூறியுள்ளனர். `யாருடைய பகையும் நாம் சம்பாதித்துக் கொள்ள வேண்டாம். அமைதியாகச் செல்வோம்’ என உறுதியாகக் கூறிவிட்டார்.

சசிகலா விளக்கம் குறித்து நம்மிடம் பேசிய குடும்ப உறவினர் ஒருவர், “சசிகலா புஷ்பா விவகாரத்தில் சில விஷயங்களைத் தெளிவுபடுத்தினார் சசிகலா. `டெல்டாவிலும் தென்மாவட்டங்களிலும் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு எதிராகச் செயல்பட்டதால்தான், இவ்வளவு இழப்புகளையும் சந்திக்க நேர்ந்தது’ என அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டார். இந்த விவகாரங்களின் பின்னால், வழக்கறிஞர்கள் சிலரும் அரசியல் பிரமுகர்கள் சிலரும் இருந்துள்ளனர் என உறுதியாக அவர் நம்புகிறார். `நமக்கும் அக்காவுக்கும் இடையில் விரோதம் வர வேண்டும் என அவர்கள்தான் திட்டமிட்டுச் செயல்பட்டனர்’ எனவும் குறிப்பிட்டார் சசிகலா. 2011-ம் ஆண்டு மன்னார்குடி குடும்பங்களின் மீது ஜெயலலிதா அதிரடி நடவடிக்கையை எடுத்தபோது, அலெக்ஸாண்டர் மோகன், அமல்ராஜ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளைக் களமிறக்கினார். இந்தப் பழிவாங்கல் சம்பவங்களுக்கு, நடராசனின் சில பேச்சுகள்தான் காரணமாக அமைந்தன. `இனியும் பழிவாங்கும் போக்குடன் நாம் செயல்பட வேண்டாம்’ என்பதைத்தான் உறவுகளுக்கு சசிகலா சுட்டிக் காட்டினார்” என்றார் விரிவாக.