`சதுரங்க வேட்டை’ படத்தில் காந்தி பாபுவாக நடித்து எல்லோரது பாராட்டையும் பெற்றவர் நடிகர் நட்ராஜ். இந்தப் படம் ஹீரோவாக இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இந்தப் படம் தவிர `மிளகா’, `முத்துக்குமுத்தாக’, `போங்கு’ போன்ற சில படங்களிலும் இவர் ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோவாக தமிழ் சினிமாவில் கால்பதிப்பதற்கு முன்பாகவே ஒளிப்பதிவாளராக இவர் பல படங்களில் வேலை பார்த்திருக்கிறார். விஜய் நடித்த `யூத்’, `புலி’ படங்களில் ஒளிப்பதிவாளர் இவர்தான். மேலும், இந்தியில் பெரிய இயக்குநரான அனுராக் காஷ்யப்பின் நெருங்கிய நண்பரும். தற்போது தெலுங்குப் படமொன்றில் வேலை செய்துகொண்டிருக்கும் இவர் ட்விட்டரில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில், “கூடப்பிறந்த அண்ணன் தம்பிக்கு என்ன பண்ணிருக்க… எத்தனை பேருக்கு பீஸ் கட்டி இருக்க … எத்தனை பேருக்குச் சாப்பாடு போடறே.. பதக்குனு அதச் சொல்லு…நல்லவன் பேர் சொன்ன பதக்குங்குதா?… ஏன் ஆகாது… இயற்கை தானே…..” னு இதே ஸ்டைலில் சில ட்வீட் போட்டிருந்தார்.
இவரது இந்த ட்வீட்டுக்குச் சிலர், இவர் நடிகர் விஷாலை மனதில் வைத்துதான் இப்படியொரு பதிவைப் போட்டிருக்கிறார் என்று கூறினர். இது சம்பந்தமாக அவரிடமே கேட்டப்போது, `தற்போது ஹைதாராபாத்திலிருக்கிறேன். இது பெர்ஷனல் விஷயம் காரணமாகத்தான் நான்யிட்ட ட்வீட். இதுக்கும் விஷாலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று சொல்லி விளக்கினார்.