’பிரவீனா’ பிரவீன் ஆனதால் ரயில் பயணத்தில் சிக்கல்! – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரயில்வே டிக்கெட்டில் ஏற்பட்ட குளறுபடியால கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் ரயிலில் பயணிக்க முடியாத நிலைமை உருவாகி விட்டது. இந்தக் குழறுபடிக்குக் காரணமான ரயில்வே நிர்வாகம் நஷ்டஈடு கொடுக்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

டிக்கெட் குளறுபடி- நீதிமன்றம் அதிரடி

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரவீனா, காவல்துறையில் சீனியர் டைபிஸ்டாக வேலை செய்து வருகிறார். சொந்த வேலையாக திருவனந்தபுரத்துக்கு மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தார். 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை முன்பதிவு செய்த அவர், அங்கிருந்து திரும்பி வருவதற்கு 10-ம் தேதிக்கு டிக்கெட் முன்பதிவு செய்தார்.

அவர் ரயிலில் பயணம் செய்தபோது டிக்கெட் பரிசோதகர் அவரது டிக்கெட்டை பரிசோதித்துவிட்டு, அவரது டிக்கெட்டில் பிரவீன் என்றும் ஆண் என்றும் குறிப்பிடப்பட்டு இருப்பதைச் சுட்டிக் காட்டினார். அத்துடன், அவரிடம் உள்ள ரயில்வே சார்ட்டிலும் பிரவீனா என்ற பெயரில் யாரும் பயணம் செய்ய முன்பதிவு செய்ததாகக் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்தார். அதனால் அவரால் தொடர்ந்து பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், ஒருவழியாக அவர் அதே ரயிலில் பயணம் செய்து திருவனந்தபுரம் சென்று சேர்ந்தார்.

அங்கு அவரது ரிட்டர்ன் டிக்கெட்டை ரயில் நிலைய அதிகாரிகளிடம் காட்டி விளக்கம் கேட்டபோது, அச்சிடுவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இது போன்ற தவறு நடந்து இருக்கலாம் என்றும் இருப்பினும் தங்களால் எதுவும் செய்ய முடியாது எனவும் தெரிவித்து விட்டனர். அதனால் மீண்டும் அவர் முன்பதிவு செய்து ஒருநாள் தாமதமாக காசர்கோடுக்கு திரும்பி வந்து சேர்ந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரவீனா, பாலக்காடு கோட்டத்துக்கும் சென்னையில் உள்ள தென்னக ரயில்வே அதிகாரிகளுக்கும் புகார் கடிதம் அனுப்பினார். ஆனால், அவருக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவருடைய முன்பதிவுக்கான விண்ணப்பத்தில் பிரவீனா என்றே எழுதி இருந்த நிலையிலும் அவருக்கு பிரவீன் (ஆண்) என டிக்கெட் வழங்கப்பட்டது நிரூபணமானது. அதனால் அவருக்கு 6000 ரூபாய் இழப்பீடாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.