பப்புவா நியூகினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை!

பப்புவா நியூகினியின் கரையோரப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, உடனடியாகச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பப்புவா நியூகினியின் தென் கரையோரப் பகுதியிலுள்ள நியூ பிரிட்டன் (New Britain) தீவில், 6.9 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கப் புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது.

நியூ பிரிட்டன் தீவின் Rabaul நகரிலிருந்து சுமார் 162 கிலோமீற்றர் தூரத்திலும், 10 கிலோமீற்றர் ஆழத்திலும் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.இருப்பினும், இது தொடர்பான சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும், இந்த நிலநடுக்கத்தை தாம் உணர்ந்ததுடன், மக்கள் அலறியடித்துக்கொண்டு தத்தமது இடங்களிலிருந்து வெளியில் வந்துள்ளனர். அத்துடன், கட்டடங்களும் குலுங்கியதாகவும், அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி, பப்புவா நியூகினியின் என்கா (Enga) மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சுமார் 100 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.